ட்ரம்புக்கு செக்! அமெரிக்காவுக்கே இந்த கதியா? அல்லாடும் அமெரிக்கர்கள்! (வீடியோ, படங்கள்)

கொரோனா நம் மனித இனத்துக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் தவிர்க்க முடியாத ஒர் பெரிய தொடர் சங்கிலிப் பிரச்சனை என்றால் அது வேலை இழப்பு தான். ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி, சீனா, இந்தியா என உலக வல்லரசான அமெரிக்கா வரை எல்லா நாடுகளுமே, தன் வேலை இல்லா திண்டாட்டத்தைச் சமாளிக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில், பெரிய அளவில் எடுபடாமலேயெ இருக்கிறது. அரசின் எந்த ஒரு முயற்சியாலும், கோடிக் கணக்கில் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களின் பசியைப் போக்க முடியவில்லை. அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் அமெரிக்கா.

அமெரிக்காவின் வேலை இல்லா திண்டாட்டம்

அமெரிக்காவில் உழைக்கக் கூடிய மொத்த மக்கள் எண்ணிக்கையில் சுமாராக 25 சதவிகித மக்களுக்கு வேலை பறி போய்விட்டதாக சொல்கிறது சி என் என் பிசினஸ் வலைதளம். இந்த எண்ணிக்கை 42.6 மில்லியன் (4.26 கோடி) எனவும் சொல்லி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பே சிக்கல்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கொரோனாவுக்கு முன்பே 45 % மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தில் இருந்ததாக சொல்கிறது சி என் என். அதே போல கெண்டக்கி மாகாணத்தில் சுமார் 40 %-க்கு மேற்பட்ட உழைக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் இருந்து இருக்கிறார்களாம். இப்படி ஏற்கனவே வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு மேலும் அடி கொடுப்பது போல வந்து துன்புறுத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா.

அமெரிக்காவில், ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை இழந்தால், அவருக்கு அரசு சில பண உதவிகளைச் செய்யும். அந்த உதவிகளின் பெயர் தான் Unemployment Benefit. இப்போது அமெரிக்காவில் அந்த உதவித் திட்டமும், சரியாக செயல்பட முடியாமல், சிக்கலில் மாட்டி இருக்கிறது. அப்படி என்ன சிக்கல்..?

68 பில்லியன் கொடுக்கப்படவில்லை

வேலை இழந்த அமெரிக்கர்கள் கடந்த மூன்று மாதங்களில் 214 பில்லியன் டாலர் பணத்தை Unemployment Benefit-ஆக பெற்று இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்க கருவூலம் 146 பில்லியன் டாலர் பணத்தை தான் கொடுத்து இருக்கிறார்கள். ஆக மீதமுள்ள 68 பில்லியன் டாலர் பணம் இன்னும் முறையாக வேலை இல்லாமல் தவிக்கும் மக்களுக்குச் சென்று சேரவில்லை என கணக்கு சொல்கிறது ப்ளூம்பெர்க்.

31% வேலை இழந்தவர்கள்

ஆக, ப்ளும்பெர்க் கணக்கின் படி, வேலை இழந்தவர்களில் சுமாராக 31 சதவிகித மக்களுக்கு, இன்னும் அரசிடம் இருந்து Unemployment Benefit சென்று சேரவில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு இன்னொரு பக்கம் வேலை இழப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் குறைந்தபட்சம் 18 லட்சம் பேர் வேலை இழப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள்.

Unemployment rate அதிகரிக்கலாம்

கடந்த ஏப்ரல் 2020-ல் 14.7 சதவிகிதமாக இருந்த வேலை இல்லா திண்டாட்டம், மே 2020-ல் , 24.9 சதவிகிதத்தைத் தொடலாம் என்கிறார்கள். அமெரிக்காவின் 1929 பொருளாதார நெருக்கடியை (Great Depression) படித்திருப்போம். அப்போது இருந்த வேலை இல்லா திண்டாட்டத்தின் அளவு இது என பயமுறுத்துகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகைச் செய்திகள்.

பழைய பாக்கி

அமெரிக்காவில், கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்தே, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இன்னும் கூட பழைய பாக்கி எல்லாம் செட்டில் செய்யாமல் வைத்திருக்கிறார்களாம். உதாரணமாக, டெக்ஸாஸ் மாகாணத்தில் 26 லட்சம் பேர், மார்ச் 2020 முதல் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதில் 6.5 லட்சம் பேருக்கு, கடந்த 3 மாத காலமாக க்ளெய்ம் கொடுக்கவில்லை என்கிறது பிசினஸ் இன்சைடர் பத்திரிகை.

திணறும் அமெரிக்கா

அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிலேயே மக்கள், தங்களுக்கான Unemployment Benefit-களுக்கு விண்ணப்பித்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மறு பக்கம் புதிதாக Unemployment Benefit கேட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது அமெரிக்காவுக்கே இந்த கதியா..? என நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

ட்ரம்ப் சவால்

அதோடு, வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில், அதிபர் தேர்தல் வேறு நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் வேலை இல்லா திண்டாட்டப் பிரச்சனை, அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ஒவ்வொரு செக்காக வைத்துக் கொண்டே இருக்கிறது. என்று இந்த பிரச்சனை, அமெரிக்க அரசுக்கும் ட்ரம்புக்கும் செக் மேட் வைத்து ஆட்டத்தை உக்கிரமாக்கப் போகிறதோ தெரியவில்லை. அமெரிக்க மக்களோ கையில் பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் ட்ரம்ப் எப்படி சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை. எல்லாம் அமெரிக்காவுக்குத் தான் வெளிச்சம்.
Comments (0)
Add Comment