ஜப்பான் விண்வெளி மையத்தில் ராக்கெட்டில் ஹோப் விண்கலத்தை பொருத்தும் பணிகள் தொடக்கம்..!!

அமீரக விண்வெளி திட்டத்தில் செவ்வாய்கிரக பயணத்திட்டம் முக்கியமான ஒன்றாகும். இந்த பயணத்திற்காக நம்பிக்கை (அரபியில் அல் அமல்) என்ற பொருளில் ஹோப் என்ற விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விண்கலத்தை 150 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலமானது 1,500 கிலோ எடை உள்ளது.

ஹோப் விண்கலம்

இதில் உள்ள சூரிய மின்தகடுகள் மூலம் விண்வெளியில் 600 வாட் மின்சாரத்தை தயாரித்து பேட்டரிகளில் சேமிக்க முடியும். இந்த விண்கலத்தால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு 1000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப முடியும். அங்கிருந்து சிக்னல் மற்றும் தகவலை பெற 13 முதல் 26 நிமிடங்கள் பிடிக்கும்.

இந்த விண்கலத்தின் மேலடுக்கில் உள்ள தகட்டில் அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் பட்டத்து இளவரசர்களின் கையெழுத்துகள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இந்த விண்கலத்தின் 3 சிறப்பு உணரும் பகுதிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், அங்குள்ள வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் அளவு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

தற்போது ஜப்பான் நாட்டிற்கு விண்ணில் ஏவ அனுப்பப்பட்டுள்ள இந்த ஹோப் விண்கலம் தலைநகர் டோக்கியோ நகரத்தில் இருந்து 1000 கிலோ மீட்டர் தெற்கு பகுதியில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் வருகிற 15-ந் தேதி அமீரக நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது அந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

அமீரகத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலம் பூமியில் இருந்து ஏவப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கு 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்ய உள்ளது. அதற்காக ஹோப் விண்கலம் எச் 2 ஏ ராக்கெட் மூலம் பூமியில் இருந்து மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் செலுத்தப்படும்.

இந்த விண்கலம் 7 முதல் 9 மாதங்களில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைய உள்ளது. இதை பொருத்தும் பணிகள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அமீரகத்தின் விண்வெளி தொடர்பான அறிவுத்திறன் மற்றும் நிபுணத்துவத்தை உலகிற்கு பரிசளிக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமீரகத்தின் இளைஞர்களின் திறமையை வெளியுலகிற்கு எடுத்துகாட்டுவதாக இது உள்ளது. மேலும் அரபு உலகின் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment