பாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்!! (படங்கள்)

மச்சான் புகழ் நடிகை நமீதாவிற்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார். அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்து சில மாதங்களில் பாஜகவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களான கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் அமையும் படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவரது முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பட்டும் படாமல் இருந்த நமீதா கடந்த ஆண்டு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்த போது அவரைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் நமீதா. தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இறுதியாக அம்மாவின் ஆசியில் பாஜகவில் இணைந்துள்ளேன்.

பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பது என் மனதில் எப்போதுமே இருக்கிறது. அதோடு சேர்த்து இப்போது விலங்குகள் நலனுக்காகவும் பாடுபடப் போகிறேன். நாட்டின் வளர்ச்சி, பெண்கள் நலன், குழந்தைகள், கல்வி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி செய்து வருகிறார். மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்றே அரசியல் கட்சிகளில் இணைகிறோம். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் சொன்னார் நமீதா. இந்த நிலையில் இன்று நமீதாவிற்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் இன்று நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.

பாஜகவில் சமீபத்தில் இணைந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து அறிவித்துள்ளார். இவர்களை தவிர சினிமா பிரபலங்களான கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான பட்டியலை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Comments (0)
Add Comment