போதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் – 24 பேர் பலி..!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல்வேறு குழுக்களாக இணைந்து மெக்சிகோவிலும், எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் இந்த கடத்தல் குழுக்கள் போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.

மேலும், மெக்சிகோவில் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை இந்த பழக்கத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் அந்நாடும், பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறு வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடந்த பகுதி

இதற்கிடையில், மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை அதிகரிக்கவும் தொழில் ரீதியில் போட்டியை உருவாக்கவும் பல குழுக்கள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணத்தின் ரஃபடோ நகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்குள் புதன்கிழமை துப்பாக்கிகளுடன் நுழைந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் அங்கு மறுவாழ்வு பெற சிகிச்சையில் நபர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த கொடூரமான தாக்குதலில் மறுவாழ்வு மையத்தில் இருந்த 24 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதைப்பொருள் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்த சம்பவம் மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment