“நான் கான்பூர்காரன்”.. கதறிய ரவுடி.. கொட்டிய மழைக்கு நடுவே.. 60 கேஸ்களுக்கும் ஒரே நாளில் “தீர்ப்பு”!! (படங்கள்)

லக்னோ: ஒரு மாபெரும் அரசியல் பின்புலம் கொண்ட ரவுடியை, காரை கவிழ்த்து விட்டு கதையை முடித்துள்ளது உத்தரப் பிரதேச போலீஸ். “நான்தான் விகேஷ் துபே.. கான்பூர்வாலா”… இதுதான் விகேஷ் துபே வெளியுலகுக்கு உதிர்த்த கடைசி வார்த்தை.. ஒரு பெரும் மிரட்டலான ரவுடியின் கதையை மழை நாள் ஒன்றில் முடித்து விட்டனர்.

எப்போதுமே இந்த போலீஸ் திருடன் விளையாட்டு என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. திருடன் ஓடிக் கொண்டே இருப்பான்.. போலீஸார் துரத்திக் கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் திருடன் பிடிபடுவான்.. சிறையில் அடைக்கப்படுவான்.. தண்டனை கிடைக்கும்.. அத்தோடு முடிந்தது. ஆனால் இப்போது ரவுடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடக்கும் துரத்தல்கள் அதிர வைக்கின்றன.

என்கவுண்டர்

இப்படிப்பட்ட துரத்தல்கள் பெரும்பாலும் என்கவுண்டரில்தான் போய் முடிகின்றன. அதில் உள்ள சர்ச்சைகளை விட்டு விடலாம்.. இப்போது துபே கதைக்கு வருவோம்.. மிகப் பெரிய டான்கள், ரவுடிகள், கேங்ஸ்டர்கள், கொள்ளையர்களைக் கண்ட உத்தரப் பிரதேசத்தில்தான் இந்த துபேயும் வலம் வந்தார். சாதாரண ரவுடி இல்லை.. அரசியல்தொடர்புகளை நிறையவே கொண்ட மிகப் பெரிய மோசமான ரவுடி.

அரசியல் தொடர்பு

பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி என எல்லாக் கட்சியிலும் துபேக்குத் தொடர்புகள் உண்டு. இவர் மட்டுமல்லாமல் இவரது மனைவிக்கும் கூட அரசியல் தொடர்புகள் உண்டு. அதாவது கணவனும், மனைவியும் தேர்தலில் நின்று வெற்றியெல்லாம் கூட பெற்றார்கள். மிரட்டி கள்ள ஓட்டு போட்டு இப்படித்தான் வென்றார்கள் அது வேறு கதை.

பாதுகாப்பு

சரி துபே எப்படி கேங்ஸ்டராக வளர்ந்தார். மக்களை பச்சைப் படுகொலை செய்த மகா மோசமான ரவுடி இவர். இந்த ரவுடியைக் கண்டு அவரது சொந்த கிராமத்தில் பயப்படாதவர்களே கிடையாது. அந்த அளவுக்கு மக்களை பாடாய்படுத்திய ரவுடி. ஆனால் 60 கேஸ்கள் வரை சரமாரியாக போலீஸார் போட்டும் கூட அவரை எதுவும் செய்ய முடியவில்லை. காரணம்.. அவரைக் காத்து வந்த அரசியல், அரசியல்வாதிகள். அவர்களுக்கு இந்த ரவுடி தேவை.. இந்த ரவுடிக்கு அவர்களின் பாதுகாப்பு தேவை. இரண்டும் கை கோர்த்துப் போனதால் போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை.

மனசாட்சி

துபேயின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. ஈவு இரக்கமே இல்லாத ரவுடியாக வலம் வந்துள்ளார் இந்த துபே. மனசாட்சியே இல்லாத மனிதனும் கூட. சுடணும்னா நினைச்சா சுட்ரணும்னு ஒரு படத்தில் விஜய் வசனம் பேசுவார் இல்லையா.. அதை கரெக்டாக கடைப்பிடித்துள்ளார் இந்த துபே. சுட்டுத் தள்ளிக் கொண்டு போய்ட்டே இருப்பாராம். யார் என்னன்னு பார்க்கவும் மாட்டாராம். அந்த அளவுக்கு மனசாட்சியைக் கழற்றி வைத்த மனிதனாக வலம் வந்துள்ளார்.

கடைசி நிமிடம்

விகாஷ் துபேவின் கடைசி நிமிடங்கள்தான் கொடுமையானவை. கையில் துப்பாக்கி கத்தியை எடுத்த ஒவ்வொருவரும் இப்படித்தான் முடிவார்கள் என்பதற்கு துபேவின் கடைசி நிமிடங்கள்தான் சிறந்த சாட்சி. உஜ்ஜைன் கோவிலில் வைத்து தூக்கப்படுகிறார் துபே. நல்லா பார்த்துக்கங்க.. உபியை அலற வைத்த ஒரு ரவுடி.. மாபெரும் கொலைகாரன்.. மனிதனாக இருக்கவே தகுதியற்ற ஒரு நபர்.. போலீஸாரின் பிடியில் சிக்கி எலியைப் போல கொண்டு வரப்படுகிறார். வெளியில் உள்ள ஜீப்பில் அவரை ஏற்ற காத்திருக்கிறார்கள் போலீஸார்.

கான்பூர்காரன்

அப்போது கத்துகிறார் துபே.. நான்தான் விகாஷ் துபே.. கான்பூர்காரன்.. அந்தக் குரலில் ஒரு பயம், பதட்டம், அச்சம், பரபரப்பு.. எல்லாம் குவிந்து கிடக்கிறது. இதுதான் துபேவின் குரலை கடைசியாக வெளியுலகம் கேட்டது. அந்தக் குரலில் ஒலித்த செய்தி இதுதான்.. என்னைக் காப்பாத்துங்க.. என்னைக் கொன்று விடுவாங்க என்பதுதான்.. இந்தப் பயம் 8 போலீஸாரை கொன்றபோது ஏன் துபேவுக்கு வரவில்லை.. அவர்களும் இப்படித்தானே துடித்திருப்பார்கள்.. ஒரு அமைச்சரை காவல் நிலையம் புகுந்து சுட்டுக் கொன்றபோது ஏன் துபே பயப்படவில்லை.. அந்த அமைச்சரும் இப்படித்தானே பயந்து அலறியிருப்பார்.

எலி – புலி

நடு ரோட்டில் நிற்க வைத்து கழைத்துப் பிடித்து அடித்து துபேவை போலீஸார் இழுத்து வந்தபோது அந்த ரவுடித்தனத்தை துபேவிடம் காண முடியவில்லை. பொறியில் சிக்கிய எலியாகத்தான் நமது கண்களில் தெரிந்தது. வேன் கவிழ்ந்தது.. காயமடைந்தார்.. தப்பி ஓடினார்.. இதெல்லாம் வழக்கமான பாலோ அப்களாகவே பார்க்க வேண்டும்.. அதையும் தாண்டி ஒரு விஷயம் மட்டும்தான் துபேவிடமிருந்து நமக்குத் தெரிவது.. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறினால் அதேபோன்ற முடிவைத்தான் அவர்களும் சந்திக்க நேரிடும்.. இதுதான் நடந்திருக்கிறது.

காவல்துறையினர்

இன்னொரு விஷயத்தையும் நாம் சொல்லியாக வேண்டும். துபே போன்றவர்களை வளர விடும் அரசியல்வாதிகள், காவல்துறையினர் என அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் இது.. ரவுடிகள் தாங்களாக உருவாவதில்லை. சூழல்கள்தான் உருவாக்குகின்றன. அந்த சூழல்களை காவல்துறையினர் அனுமதிக்கவே கூடாது. ஆரம்பத்திலேயே வேரோடு அழித்து விட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் அமைச்சர், காவல்துறையினர் என பலி கொடுக்க வேண்டியிருக்கும்.. கொட்டும் மழைக்கு மத்தியில் 60 கேஸ்களுக்கு இன்று தீர்ப்பு எழுதியுள்ளனர் உபி போலீஸார்.. “நான் கான்பூர்காரன்”.. துபேவின் கதறல்.. அந்த மழையோடு மழையாக கரைந்து போய் விட்டது..!

Comments (0)
Add Comment