இன்று 283 பேருக்கு கொரோனா தொற்று; 1,980 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்!!

இன்று இதுவரையான காலப்பகுதியில் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் 106 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், இன்று மாலை 87 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,437 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 446 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 1,980 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் மத்திய நிலையத்திலேயே சிகிச்சையளிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ளவர்களைப் பார்வையிட கடந்த 4 ஆம் திகதியே அனுமதி வழங்கப்பட்டது.

அமற்கமைய, புனர்வாழ்வு நிலையத்திற்கு வருகை தந்தவர்களை அடையாளம் காண்பதற்கான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

எனினும், நூற்றுக்கும் அதிகமானவர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment