சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வர்த்மானிப்படுத்தவேண்டும் – பெப்ரல் கோரிக்கை!!

தேர்தல் பிரசார காலப்பகுதியில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பான வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கின்றது. அதனை வர்த்தமானி படுத்துவதில் தடைகள் இல்லையெனில் அதனை விரைவாக மேற்கொள்ளவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாச்சி தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை வர்த்மானி படுத்தாமல் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சறுத்தில் இன்னும் இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும் குறித்த வழிகாட்டல்கள் வர்த்தமானி படுத்தப்படாமல் இருப்பதால் இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கின்றது. அதனை வர்த்தமானிப்படுத்துவதில் தடைகள் எதுவும் இல்லாவிட்டால் விரைவாக அதனை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்கள் வர்த்மானி படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரதிநிதிகளாக வருவதற்கு எதிர்பார்த்திருக்கும் வேட்பாளர்கள் யாருடைய உயிறுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயற்படாமல், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடக்கவேண்டும்.

தேசிய தலைமைத்துவம் ஒன்றுக்கு எதிர்பார்க்கும் வேட்பாளர்கள் சமூகத்துக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும். கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொள்ளவேண்டும். அதனால் மக்கள் சார் தலைவராக எதிர்பார்ப்பு இருப்பவர்கள் எப்போதும் சமூகத்துக்கு முன்மாதிரியாகவே செயற்படவேண்டும்.

எனவே தற்போது கொராேனா தொற்று மீண்டும் பரவும் ஆபத்து இருந்துவருவதால் தேர்தல் பிரசாரங்களின்போது வேட்பாளர்கள் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் தங்கள் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment