அமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியா டிரம்ப் சிலைக்கு தீ..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப். இவர் ஐரோப்பிய நாடான சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

அங்கு அவருடைய சொந்த நகரமான செவ்னிகா அருகே, அவருக்கு மரத்தால் ஆன சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அமெரிக்க கலைஞரான பிராட் டவ்னி நிறுவி இருந்தார்.

இந்த சிலை, அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாளின் இரவில் (கடந்த 4-ந் தேதி) தீ வைத்து எரித்து சேதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த சிலை அகற்றப்பட்டு விட்டது.

இது பற்றி விசாரணை நடத்துவதாக சுலோவேனியா போலீசார், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இந்த சிலை, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபோது மெலனியா டிரம்ப் நீல நிற ‘கோட்’ அணிந்திருந்ததை பிரதிபலித்தது. கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி நிறுவப்பட்ட மெலனியாவின் உருவச்சிலை ஒரே ஆண்டில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டு அடிமைத்தனத்துடன் தொடர்புள்ள அமெரிக்க தலைவர்களின் நினைவுச்சின்னங்கள் சேதப்படுத்தப்படும்நிலையில், சுலோவேனியாவில் மெலனியா டிரம்ப் சிலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment