கொரோனாவுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி வந்துவிடும்- அமெரிக்க நிபுணர் நம்பிக்கை..!!

ஐ.நா. சபையின் கல்வி தாக்கம் பற்றிய ஆன்லைன் அமர்வில், அமெரிக்க தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகள் நம்பிக்கை அளித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனா வைரசிடம் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். அது கடினமான தொற்றுநோய். அது தொடர்ந்து பரவ வாய்ப்பு உள்ளது. அதைக்கட்டுப்படுத்துவதற்கு நல்ல பொது சுகாதார நடவடிக்கைகள் முக்கியம்” என்று கூறினார்.

மேலும், “மனித குலத்தின் மீதான அசாதாரணமான இந்த தாக்குதலில் இருந்து மீள வேண்டுமானால், உலகளாவிய ஒத்துழைப்பும், வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியமானவை. இந்த வைரஸ் நோய், விரைவாகவும், அதிகளவிலும் பரவுகிறது, அதிகளவில் இறப்புகளையும் ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment