பெண் போலீஸ் ஏட்டுவை விசுவாசத்துடன் வரவேற்ற நாய்..!!

கர்நாடகத்தில் தார்வார் சரக போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுவாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் அவரது சளி, ரத்தம் மாதிரி சேகரித்து கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அந்த பெண் போலீஸ் ஏட்டு குணமாகி வீடு திரும்பினார். மேலும் வீட்டு தனிமையை நிறைவு செய்த அவர் நேற்று வழக்கம்போல் பணிக்கு திரும்பினார். அவருக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து உதவி போலீஸ் கமிஷனர் அனுஷா தலைமையில் போலீசார் மலர் தூவியும், கைகளை தட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதுபோல் பணிக்கு திரும்பிய பெண் போலீஸ் ஏட்டுவை வரவேற்க அழையா விருந்தாளியாக ஒரு நாய் வந்து நின்றது. அது பெண் போலீஸ் ஏட்டுவை பார்த்ததும் வாலை ஆட்டியபடி அவரது அருகில் சென்று நின்று கொண்டு தனது விசுவாசத்தை காட்டியது. அதாவது, இந்த நாய், கடந்த 5 ஆண்டுகளாக போலீஸ் நிலையம் முன்பு வசித்து வருகிறது. அந்த நாய்க்கு, பெண் போலீஸ் ஏட்டு அடிக்கடி உணவு வைப்பது, பிஸ்கெட் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த விசுவாசத்தில் தான் அந்த நாய், 20 நாட்களாக பெண் போலீஸ் ஏட்டுவை காணாமல் பரிதவித்து வந்துள்ளது. தற்போது அவர் பணிக்கு திரும்பியதை பார்த்து அவர் அருகில் நின்று அந்த நாய், பெண் போலீஸ் ஏட்டுவிடம் விசுவாசத்தை காட்டிய சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Comments (0)
Add Comment