விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: தேவகவுடா..!!

முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிராக அவசர சட்டங்களை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. வேளாண்மை சந்தைகள் திருத்த சட்டம், நில சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் தெருவில் தள்ளப்படுவார்கள். இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 3 கடிதம் எழுதியுள்ளேன். அதனால் அந்த அவசர சட்டங்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் பல்வேறு பிரிவுகளை அரசு ரத்து செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு விரோதமானது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நான் அமைதியாக இருந்தேன். ஊரடங்கு விதிமுறைகளை மீறக்கூடாது என்று பேசாமல் இருந்தேன். அரசின் அவசர சட்டங்கள் பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதனால் மாநில அரசு விழித்துக்கொள்ள வேண்டும். நில சீர்திருத்த சட்டத்தால் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் துறையினர் வசம் போகும். அதனால் இந்த அவசர சட்டங்களை ரத்து செய்து அரசு விவசாயிகளின் பக்கம் நிற்க வேண்டும்.

பெரும்பான்மை இருக்கிறது என்பதால் இத்தகைய மோசமான சட்டங்களை கொண்டு வருவது அநியாயம். இந்த அவசர சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். நானே தெருவில் இறங்கி போராடுவேன் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் சொல்கிறது. இதை எதிர்த்து போராட வேண்டுமா? வேண்டாமா? என்று தெரியவில்லை.

யார் ஊழல் செய்கிறார்களோ அவர்களுக்கு மீண்டும் பலம் கிடைக்கிறது. இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன. அதற்காக நான் இதை வேடிக்கை பார்க்கிறேன் என்று அர்த்தம் அல்ல. பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயத்தில் அநீதி ஏற்பட்டால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் அரசை அகற்றியது யார்?, ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி செய்து கொண்டிருப்பது யார்?. என்பது மக்களுக்கு தெரியும்.

இரண்டு தேசிய கட்சிகளும் மக்களின் தீர்ப்பை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதே இவர்களுக்கு முக்கியம். பா.ஜனதா மீது குமாரசாமி மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணம் யார்?. என்பதும் மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. எங்கள் கட்சியை காப்பாற்றுவது எங்களின் குறிக்கோள். நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது எனது வழக்கம் அல்ல.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Comments (0)
Add Comment