சீனாவுடன் எல்லை பதற்றம்: இந்திய பெருங்கடலில் அதிக அளவில் போர்க்கப்பல்களை நிறுத்தும் இந்தியா..!!

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இந்தியா – சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அதன்பின் இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் பலகட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியுறவுத்துறை மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா பாதுகாப்பு ஆலோசரும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருநாட்டு படைகளும் தங்களது பழைய இடத்திற்கு திரும்ப ஒத்துக்கொண்டன.

லடாக் பகுதியில் சீனா 2 கி.மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கினாலும் கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் பின்வாங்க தயங்கியது.

இந்த விசயத்தில் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதை சீனாவுக்கு உணர்த்த பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா முடிவு செய்தது. சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்பின் முக்கியமான செல்போன் செயலிகளை தடைசெய்தது.

மேலும், இந்திய ராணுவம் லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க தொடங்கியது. அதிக செயல்திறன் கொண்ட ராணுவ டாங்கிகளை எல்லைக்கு நகர்த்தியது. போர் விமானங்களையும் அனுப்பியது.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் கப்பற்படையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதிக அளவில் முன்கள போர்க் கப்பல்களையும், நீர்மூழ்கி கப்பல்களையும் குவித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார கட்டுப்பாடு, ராணுவம் நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், தற்போது கப்பற்படையையும் அதிகரித்துள்ளது, கிழக்கு லடாக் பகுதியில் சீனாவின் எந்தவொரு தவறான நடவடிக்கையையும் இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவாக உணர்த்தவே இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment