பாஜகவுக்கு தாவும் கு.க.செல்வம்- திமுக தலைமைக்கு ஏற்பட்ட பெரும் சறுக்கல் – தேர்தல் நேரத்தில் சிக்கல்! (படங்கள்)

திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் ஒரு எம்.எல்.ஏ. இணைவது திமுகவுக்கு மிகப் பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. காரணம், தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியாகவே பாஜக உள்ள நிலையில் அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியின் எம்எல்ஏ தாவுவது சாதாரண விஷயமல்ல.

10 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் இல்லாத போதும் ஒருவித நம்பிக்கையில் அந்த கட்சியினர் உள்ளனர். 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை திமுக கைப்பற்றும் என்பது அவர்களது நம்பிக்கை.

நம்பிக்கையுடன் திமுக சீனியர்கள்

இந்த நம்பிக்கையால்தான் என்னதான் பிற கட்சிகள் பேரம் பேசினாலும், கண்ணுக்கு ஆட்சி அமைப்போம்னு தெரியுது.. இந்த நேரத்துல போயி கட்சி மாறனுமா? என தயங்கியபடி பல சீனியர்கள் திமுகவில் தங்கி இருக்கின்றனர். இதனை திமுக தலைமையும் உணராமல் இல்லை.

பாஜகவுக்கு போகும் திமுக எம்.எல்.ஏ

இந்நிலையில் திமுக தலைமைக்கு மிக நெருக்கமான எம்.எல்.ஏ. கு.க. செல்வம், பாஜகவில் இணைய இருப்பது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கு.க.செல்வம், மக்கள் செல்வாக்கு படைத்தவர் அல்லதான். ஆனால் திமுக தலைமைக்கு மிக மிக அன்யோன்யமானவர், அப்படி ஒரு நெருக்கமானவர். அதனால்தான் ஆயிரம் விளக்கு தொகுதி அவருக்கு கொடுக்கப்பட்டது.

மா.செ. பதவி விவகாரத்தில் அதிருப்தி

அண்மையில் கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். அவர் வகித்து வந்த திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கு.க. செல்வம் பெயர் அடிபட்டது. அவரும் கட்சி தலைமைக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறோம். அதனால் நமக்குதான் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தார். ஆனால் மாவட்ட செயலாலர் பதவி சிற்றரசுவுக்கு கொடுக்கப்பட்டதில் கு.க.செல்வம் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

பாஜக வலையில் சிக்கிய செல்வம்

இதனை மோப்பம் பிடித்துதான் பாஜகவும் வலை வீசி இருக்கிறது. இந்த வலையில் சிக்கிய செல்வம், பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. திமுகவில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் வேறு கட்சிக்கு தாவியது இல்லை. அதுவும் தமிழகத்தில் எந்த ஒரு செல்வாக்குமே பெற முடியாத பாஜகவுக்கு திமுக எம்.எல்.ஏ.ஒருவர் தாவி இருப்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

திமுகவுக்கு பெரும் சறுக்கல்

மத்திய அரசை பல்வேறு பிரச்சனைகளில் படுதீவிரமாக திமுக எதிர்த்து வருகிறது. திமுகவின் இந்த எதிர்ப்பு குரலை மட்டுப்படுத்தும் வகையில்தான் எம்.எல்.ஏ.வை வளைத்துப் போட்டு ஆட்டம் காட்டியிருக்கிறது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இன்னொரு பக்கம், தலைமைக்கு நெருக்கமான ஒரு எம்.எல்.ஏ.வையே தக்க வைக்க முடியாத நிலை எனில் பல நூறு கோடி ரூபாய் தேர்தல் வியூகம் எல்லாம் எனனவாகுமோ என்கிற ஆதங்கத்தையும் திமுகவினரே வெளிப்படுத்துகின்றனர்.

Comments (0)
Add Comment