புர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 20 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நவுங்கு நகரில் நேற்று முன்தினம் கால்நடைச் சந்தை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் கால்நடைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் அங்கு குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.

ஆனால் அந்த மர்ம கும்பல் சற்றும் ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டிச் சென்று குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளினர்.

இந்த கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக இந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Comments (0)
Add Comment