கொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி!!

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா நேற்று 50 லட்சத்தை கடந்தது. இங்கு மொத்த பலி எண்ணிக்கை 1.62 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலும் பலி எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசிடம், இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவிக்கின்றன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதனையும் மீறி பரவுகிறது. அதே நேரம், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விதிகளை மக்கள் மீறுவதால்தான் வைரஸ் அதிகமாக பரவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார திறப்பு நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை காற்றில் பறக்கவிட்டதால், பாதிப்பில் உலகளவில் இன்று முதல் 2 இடங்களில் உள்ளன. அமெரிக்காவில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவுடன் 50 லட்சத்தை கடந்தது. பிரேசில் 30 லட்சத்துடன் 2வது இடத்தில் உள்ளது. மேலும், அமெரிக்காவில் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1.62 லட்சமாக அதிகரித்துள்ளது. பிரேசிலிலும் பலி எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை கடந்தது.

மொத்தம் 21 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட பிரேசிலில், கடந்த மே மாத இறுதியில் முதல் முறையாக ஒரேநாளில் 905 பேர் பலியாகினர். அதன் பிறகு, தினமும் சராசரியாக 1,000 பேர் இறந்து வருகின்றனர். இந்நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலகளவில் 2வது பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தற்போதுதான் 21.53 லட்சத்தை கடந்துள்ளது. இறப்பும் 43 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 14.80 லட்சமாக உள்ளது.

Comments (0)
Add Comment