பெற்றோர் எதிர்ப்பால் காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் கணவன்- மனைவி தற்கொலை

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அடுத்த மங்களகரி சேர்ந்தவர் பவன் குமார் (வயது 19). மாச்சாயா பாளையத்தை சேர்ந்தவர் சைலஜா (18).

இருவரும் டிக்டாக் மூலம் பழகி வந்தனர். பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.

ஆனால் காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறினர்.

கடந்த மாதம் 3-ந்தேதி பவன்குமார், சைலஜா திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து தம்பதி இருவரும் பவன்குமாரின் சொந்த ஊரான மங்களகிரி சென்றனர். பவன்குமாரின் பெற்றோர் காதல் திருமணம் செய்த அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். இருவரது பெற்றோரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் இருவரும் மனமுடைந்தனர்.

பவன்குமார், சைலஜா நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே சேலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாச்சாயபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments (0)
Add Comment