தேனி அருகே காதலனுடன் சென்ற மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி செல்வி. ஜெயபால் பெங்களூருவில் தங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா. டிப்ளமோ பட்டதாரியான இவருக்கும், தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு முன்பு கீர்த்தனா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் கீர்த்தனா வேறு ஒரு வாலிபரை காதலித்ததும், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் காதலருடன் சென்று விட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயபால் புகார் அளித்தார். போலீஸ் நிலையத்தில் தனது காதலருடன் ஆஜரான கீர்த்தனா தனக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், காதலருடன் செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயபால் மற்றும் அவரது மனைவி கண்ணீருடன் போலீஸ்நிலையத்தை விட்டு வெளியேறினர். விரக்தியடைந்த ஜெயபால் தனது மகள் கீர்த்தனாவுக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சிட்டு சின்னமனூர், வேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டினார். இதை பார்த்ததும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

Comments (0)
Add Comment