வங்காளதேசம் : மதவழிபாட்டு தளத்தில் ஏ.சி.க்கு செல்லும் கியாஸ் குழாய் வெடித்து விபத்து – 16 பேர் பலி..!!!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று வழக்கம்போன மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.

வழிபாட்டு நிகழ்ச்சியின் போது மசூதியின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த மசூதியில் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி.களுக்கு (ஏர் கண்டிஷனர்) செல்லும் கியாஸ் குழாயில் வாயு கசிவு ஏற்பட்டது.

இந்த கியாஸ் கசிவு காரணமாக ஏ.சி.கள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் மசூதியில் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment