சவுதியை தொடர்ந்து இஸ்ரேல்-அமீரக விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள பக்ரைனும் அனுமதி..!!

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பயனாக எகிப்து, ஜோர்டானும் ஆகிய நாடுகள் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த மாதம் 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.

இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும்,ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை அரபு அமீரகம் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தலாம்.

இதற்கிடையில், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின்
நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் எல் அல் விமானத்தில் இஸ்ரேல் நாட்டில் இருந்து அமீரகத்திற்கு கடந்த 31 ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

இந்தை விமானம் சவுதி அரேபியாவின் வான்பரப்பு வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமான போக்குவரத்து பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்திக்கொள்ள சவுதி அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிகழ்வு வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருத்தப்பட்டது. ஏனென்றால் இஸ்ரேல் நாட்டு விமானங்கள் சவுதி வான் எல்லையை
பயன்படுத்த பல ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சவுதியை தொடர்ந்து மற்றுமொரு வளைகுடா நாடான பக்ரைனும் 2-வது நாடாக இஸ்ரேல்-அமீரக விமான போக்குவரத்திற்கு தங்கள்
நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் பக்ரைன் வழியாக இஸ்ரேல் விமானங்கள் பறக்க
தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், பக்ரைன் இதற்கு முன்னர் இஸ்ரேலுடன் பொருளாதார ரீதியிலோ,ராஜாங்க ரீதியிலோ இணைப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், பக்ரைனின் இந்த நடவடிக்கை இஸ்ரேல் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளின் படியே பக்ரைன் தனது வான் எல்லையை இஸ்ரேல் விமானங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளரும், மருமகனுமான குஷ்னர் சமீபத்தில் பக்ரைன் நாட்டு அரசர் ஹமீத் பின் இஷா அல் கலிபாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்ப்போது இஸ்ரேலுடன் அமைதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமேன பக்ரைனிடம் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளரின் சமீபத்திய பக்ரைன் பயணத்திற்கு பின் இஸ்ரேல் விமானம் தனது நாட்டு வான் பரப்பை பயன்படுத்திக்கொள்ள பக்ரைன் அனுமதி வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Comments (0)
Add Comment