ஊறுகாய் தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை – உடன் தங்கிய தொழிலாளி வெறிச்செயல்…!!

பீகாரை சேர்ந்தவர் சித்துகுமார் (வயது 17). இவர் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவரது அறையில் கார்த்திக் (35), பஷ்ரங்கிகுமார் (20) உள்பட 3 பேர் தங்கினர். கம்பெனி விடுதியில் இருந்த 4 பேரும் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்.

மதியம் தனித்தனியே வந்து சாப்பிட்டு விட்டு பின்னர் மீண்டும் வேலைக்கு சென்றனர். சித்துகுமாரும், பஷ்ரங்கிகுமாரும் அறைக்கு வந்தனர். சாப்பிட முயன்றபோது குழம்பு குறைவாக இருந்தது. இதனால் ஊறுகாய் வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று சித்துக்குமார் கூறினார். ஆனால் ஊறுகாய் பொட்டலத்தை பஷ்ரங்கிகுமார் ஒளித்து வைத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பஷ்ரங்கிகுமார், சித்துகுமாரை தாக்கி கழுத்தை நெரித்தார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். விழுந்து கிடந்த சித்துகுமாரின் நெஞ்சில் பஷ்ரங்கிகுமார் பலமாக தாக்கினார். இதில் அவர் மயங்கினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பஷ்ரங்கிகுமாரை சமாதானம் செய்தனர். பின்னர் உயிருக்கு போராடிய சித்துகுமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பீளமேடு போலீசார் பஷ்ரங்கிகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment