ரபேல் இணைப்பு- இந்திய இறையாண்மை மீது கண் வைப்போருக்கு எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீ‌‌ஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், பிரான்சில் தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த உலகிற்கும் அனுப்பும் ஒரு பெரிய மற்றும் கடுமையான செய்தியாகும். குறிப்பாக நமது இறையாண்மையின் மீது கண் வைப்போருக்கு உறுதியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

‘எங்கள் எல்லைகளில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த போர்விமானம் இணைப்பு மிக முக்கியமானது. எனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தில், இந்தியாவின் பார்வையை உலகத்தின் முன் வைத்தேன். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யக்கூடாது என்ற எங்கள் தீர்மானத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். இதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்றும் ராஜ்நாத் சிங் பேசினார்.

லடாக்கில் தற்போது நிலவும் பதற்றத்தின்போது விமானப்படையின் பணிகள் குறித்து பாராட்டிய ராஜ்நாத் சிங், ‘இந்திய விமானப்படை தனது விமானங்கள் மற்றும் தளவாடங்களை முன்கள நிலைகளில் நிறுத்திய வேகம், நமது விமானப்படை அதன் செயல்பாட்டுக் கடமைகளை நிறைவேற்ற முழுமையாக தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது’ என்றார்.

Comments (0)
Add Comment