கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவு..!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதுவரை மாநிலத்தில் 4¼ லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 6,800-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து வைரஸ் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருவதால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது. இதை மேலும் பரவாமல் தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைக்கான உபகரணங்கள் வழங்கப்படும். தேவையான அளவுக்கு டாக்டர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை மையங்கள் குறைவாக இருக்கும் மாவட்டங்கள், அண்டை மாவட்டத்திற்கு சளி மாதிரியை அனுப்பி விரைவாக பரிசோதனை செய்ய வேண்டும்.

பூத் கமிட்டி மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காண வேண்டும். ஆக்சிஜன் குறைவாக இருந்தால், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதை பெற்று நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். வீடு வீடாக சென்று பொதுமக்களின் உடல் நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் முதல்நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. 900 டாக்டர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கர்நாடகத்தில் கொரோனா மரண விகிதத்தை குறைக்க அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தர வாய்ப்புள்ளது. அதனால் அங்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவுகளில் செயற்கை சுவாச கருவிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். வீட்டு தனிமையில் இருக்கும் வைரஸ் பாதித்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ரூ.8,071 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகம் வந்த மத்திய குழுவிடம் உரிய ஆதாரங்களுடன் சேதம் குறித்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகளவில் நிவாரண உதவியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மழையால் இடிந்து விழுந்த வீடுகளை கட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்துள்ளதால், விவசாய பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் உங்களின் சக்தியை மீறி பணியாற்றி வருகிறீர்கள். செயற்கை சுவாச கருவி பற்றாக்குறை இல்லை என்று கூறியுள்ளீர்கள். இது திருப்தி அளிப்பதாக உள்ளது.

உங்களின் வங்கி கணக்கில் பணம் இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சி.டி.ரவி, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மீன்வளம் மற்றும் இந்து அறநிலையத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment