கேரள மந்திரி ஜலீல் பதவி விலக கோரி பாஜக போராட்டம்- தலைமைச் செயலகம் முற்றுகை..!!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை மந்திரி ஜலீலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதாவது, அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் ஜலீல் பதவி விலகக் கோரி பாஜகவினர் இன்று திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Comments (0)
Add Comment