தொடர்ந்து குறி வைக்கபப்படும் வெடுக்குநாறி!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் நெடுங்கேணி பிரதேசத்தில் அழகிய மலைகள் அமைந்துள்ள இயற்கையான காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது வெடுக்குநாறி மலை. தமிழர் பிரதேசத்தின் அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையை குறிவைத்துள்ளது தொல்பொருள் திணைக்களம். நெடுங்கேணி பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பாலமோட்டை கிராமத்தினை ஊடறுத்து காட்டுப்பகுதியூடாக மூன்று கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் போது வெடுக்குநாறி மலையை அடைந்து விடமுடியும்.

இந்த மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வரர் என்ற பெயருடைய லிங்கத்தை வைத்து பல ஆண்டுகளாக அப்பிரதேச மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். முன்நூறு மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலையின் அடிவாரத்தில் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள், மர்மக்கேணி, இராஜநாக குகை போன்றவற்றை காண முடிகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட வெடுக்குநாறி மலைப்பகுதிக்கு ஐந்து தலைமுறைக்கு மேலாக வெடுக்குநாறி மலைக்கு சென்று மக்கள் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். ஒரு பரம்பரையை சேர்ந்த பூசாரிகளே குறித்த மலைப் பகுதியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் லிங்கத்திற்கு பூஜைகளை செய்து வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வடக்கு பகுதிக்குள் உள் நுழைந்த தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன சகட்டு மேனிக்கு மக்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றை இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழ் மக்களின் ஆலய வழிபாட்டிற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
வுளவளத்திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் வடக்கின் தரைதோற்றம், யுத்தம் நடந்த பிரதேசங்கள்,மக்கள் இடம்பெயர்ந்த பிரதேசங்கள் என்பன் குறித்த எந்த அறிவுமற்றவர்களாக இருப்பதுடன் வன்னி பிரதேசத்திலுள்ள பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயலாற்ற மறுத்து வருவதுடன் கூகுள் படத்தின் மூலம் காடுகளாக அறியப்படும் இடங்களில் எல்லை கட்டைகளை போட்டு மக்களின் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இலங்கையில் நீண்டகாலம் நடைபெற்ற உள்நாட்டு போர் மக்களை உள்நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாடுகள் நோக்கியும் இடம்பெயரச் செய்துள்ளது. முப்பது வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் இப்போது பாரிய மரங்கள் வளர்ந்தும் பற்றைகள் வளர்ந்தும் இருப்பதால் கூகுள் படத்தில் காடுகளாகவே தெரியும், ஆனால் அவ்வாறான மக்கள் வாழ்நநத இடங்களில் கட்டிடங்கள், கிணறுகள் என்பன இடிபாடுகளுடன் காணப்படுகின்றன இவற்றைகூட அடையாளம் கண்டு அவைகள் மக்கள் குடியிருந்த பிரதேசங்கள் என அடையாளம் காண முடியாத தற்குறிகளாக வனவளத்திணைக்களத்தினர் இருக்கின்றார்களா? ஏன்ற கேள்வி எழுகின்றது.

தோல்பொருள் திணைக்களமானது தொல்பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்தை மறந்து தமிழர்களின் பாரம்பரியங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன், வடக்கில் குறிப்பாக வன்னிப்பகுதியில், முல்லைத்தீவு நீராவிப்பிட்டி, மன்னார் திருக்கேதீஸ்வரம், மன்னார் முருங்கன் பிள்ளையார் ஆலயம் போன்றன ஆக்கிரமிக்கப்பட்டது. வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை அண்டிய கடற்கரை பகுதிகளில் காணப்படும் அல்லி இராணி கோட்டை போன்ற புரதான கட்டிடங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பொதும் அவைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாத தொல் பொருள் திணைக்களம் தமிழ் மக்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கி வருகின்றது.

வவுனியாவில் தொல் பொருள் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியன இணைந்து வெடுக்குநாறி மலைமீது கண்வைத்தன அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையில் தமிழ் மக்கள் வழிபாடு செய்வதற்கு பொலிசாரினால் தடை விதிக்கப்பட்டது.

வெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கோரி வவுனியா மற்றும் நெடுங்கேணி பிரதேசங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்தது.

மக்களின் போராட்டங்களை தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டிற்கு பொலிசாரினால் அனுமதி வழங்கப்பட்டது. வெடுக்கு நாறி மலைப்பகுதியை தொடர்ச்சியாக கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த நெடுங்கேணி பொலிசார் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் மத வழிபாட்டிற்கு செல்லும் பொதுமக்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்படும் வசதிகளை தடுத்து நிறுத்தினர்.

நெடுங்கேணியிலிருந்து வெடுக்குநாறி மலை செல்லும் வீதிகள் புனரமைக்க கூடாது, மக்கள் மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுக்கள் அமைக்க கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்த பொலிசர் ஆலய நிர்வாகத்தினருடன் விசாரணை என்ற பெயரில் முரண்பாடுகளை கொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து வருடாந்தம் நடத்தப்படும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்திற்கு வரும் பக்தர்களை தடுக்கும் முகமாக வீடியோ, புகைபடம் போன்றவற்றை எடுத்தும் அச்சமூட்டும் செயற்பாடுகளில் பொலிசார் ஈடுபட்டு வருவதாக ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 18-09-2020 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

வெடுக்குநாறி மலைப்பிரதேசத்தை அபகரிப்பதையும் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டு தொல்லியல் திணைக்களம் நெடுங்கேணி பொலிசாரின் ஊடாக ஆலய நிர்வாக சபையினர் மீதும் ஆதிலிங்கேஸ்வரர் வருடாந்த பொங்கல் நிகழ்வை தடை செய்ய வேண்டும் என்று வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கும் வழக்கை வவுனியா நீதிமன்றம் தள்ளுபடி செய்தும் மக்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த நிலையில் ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பொது மக்களை ஒளிப்பதிவு செய்வதுடன் பலனாய்வாளர்களின் பிரசன்னம் காரணமாக அப்பிரதேசத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆலயம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு வரும் பொலிசார் சப்பாத்து அணிந்து ஆலயத்திற்குள் பிரவேசிப்பதாக பூசாரி உட்பட ஆலயத்தின் நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்த பொலிசார் வெடுக்குநாறி மலையில் வழிபாட்டிற்கு தடை விதிக்க கோரும் மனுவில் வழிபாட்டிற்கு அனுமதி அழித்தால் கலவரம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அதனால் நீதிமன்றம் வருடாந்த பொங்கல் உற்சவத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இவ்வாறான பொலிசார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அமைதி வேண்டி ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு மன வேதனையையும், பயத்தையும் உண்டு பண்ணியுள்ளது.

இலங்கையில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பௌத்த ஆலயங்களிலோ அல்லது இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலோ வழிபாடுகளில் கலவரங்கள் நடந்ததாக வரலாறு இல்லை அவ்வாறான நிலையில் பொலிசாரின் இவ்வழக்கானது கற்பனையின் உச்சமாக காண முடிகின்றது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நெடுங்கெணி பொலிசாரிடம் ஏன் ஒலி பெருக்கி பாவிப்பதற்கு தடை விதித்துள்ளீர்கள், ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதியை வழங்கலாம்தானே என கேட்டதற்கு வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதிக் கடிதம் எடுத்து வந்தால் அனுமதி வழங்கமுடியும் பொலிஸ் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நான்கு நாட்கள் திருவிழா முடிந்து விட்ட நிலையில் இறுதியாக இருக்கும் ஆறு நாட்களுக்குள் கடிதத்தை பெற்று வரமுடியாது என்பதுடன் குறித்த திணைக்களங்கள் அனுமதி வழங்காது என தெரிந்தும் பொலிஸ் அதிகாரி இவ்வாறு தெரிவித்ததானது அவரின் நோக்கத்தை நன்றாக விளங்கிக் கொள்ள கூடிதாக இருந்தது.

இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையில் நல்லிணக்கம் உருவாகி விட்டதாகவும் மக்கள் இனி கவலையின்றி வாழலாம் என்ற பொருள்பட சர்வதேச மட்டத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 2020 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுடமன்ற தேர்தல்கள் முடிவடைந்ததன் பின் இன மத நல்லிணக்கங்கள் கேள்விக்குறியாக தொடங்கியுள்ளதா? என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மக்கள் இன்னும் தங்கள் சகஜ வாழ்க்கைக்குள் திரும்பியிருக்கவில்லை, தென்னிலங்கையிலிருந்து வடக்கு வருபவர்கள் எல்லாம் இன மத நல்லிணக்கம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு போதனை நடத்துவதுடன் வடக்கில் பிரதேசத்திற்கு இரண்டு நல்லிணக்க குழுக்கள் மற்றும் சர்வமத குழுக்களை உருவாக்கி இன மத நல்லிணக்கத்தை போதித்து வருகின்றனர்.

இலங்கை பல்லினங்கள் வாழும் ஒரு நாடு இனங்களுக்கிடையி;ல் நல்லிணக்கம் என்பது முக்கியமான ஒன்று, இலங்கை அரசு நல்லிணக்கமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் சகஜ நிலைக்கு திரும்ப போராடிக் கொண்டிருக்கும் மக்களிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது, அல்லது நல்லிணக்கம் என்றால் தமிழ் மக்களுக்கு தெரியாது என நினைத்து போதனை நடத்துகிறதோ? தெரியவில்லை.

இலங்கை பாராளுமன்றத்தில் நல்லிணக்கம் தொடர்பாக குழு உருவாக்கப்பட்டு அதன் கண்காணிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரதேச மட்டத்தில் பல நல்லிணக்க குழுக்களை உருவாக்கி நாட்டில் இன மத நல்லிணக்கத்தை பேணிவரும் நிலையில் வடக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசாரின் நடவடிக்கைள் தமிழ் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகின்றது. நல்லிணக்கமானது மேலிருந்து கீழ் நோக்கி பரவலாக்கப்பட வேண்டுமே ஒழிய கீழிலிருந்து மேல்நோக்கி செல்வது என்பது சாத்தியப்பாடானதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொலிசார் தமிழ் மக்களின் மத அனுஸ்டானங்களில் ஒத்துளைக்காமல் நேர் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வது சமாதானத்தை நேசிக்கும் மக்களின் மனங்களில் கவலையை உண்டு பண்ணியுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்விற்கு குடைச்சல் கொடுக்கும் பொலிசார் மற்றும் தொல்பொருள் திணைக்களம் தொடர்பாக இந்து அமைப்புக்கள் தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை எற்படுத்தியுள்ளது.

வடக்கில் சிவசேனை மற்றும் அந்தணர் ஒன்றியம் போன்றவைகள் கிறிஸ்தவர்கள் மீது தீராத வன்மம் கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக உடனடியாகவே போரட்டங்கள் நடத்த கிளம்பி விடுகிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி, திருகோணமலை கண்ணியா, நெடுங்கெணி வெடுக்குநாறி மலை போன்ற இந்து மக்கள்pன் வழிபாட்டு தலங்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இவ் அமைப்புக்கள் கள்ள மௌனம் சாதித்து வந்திருந்தனர். தங்கள் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்ட போது மக்கள் தன்னிச்சையாக ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

தங்கள் ஆலயங்களை, புனித பூமியை மீட்டெடுக்க தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களில் இந்து அமைப்புக்கள் கலந்து கொள்வதில்லை அறிக்கைகளை விட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள் என தொடர்ச்சியாக மக்கள் குற்றச்சாட்டுக்களை இந்து அமைப்புக்களை நோக்கி முன்வைத்து வருகின்றனர்.

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் தமிழர் இலங்கைத்தீவில் ஆதி குடிகள் என பேசி சிங்களவரை எரிச்சலுக்குட்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வருகிறார்கள் ஒழிய அடக்கு முறைக்குள் உள்ளாக்கப்படும் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படும் ஆலயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. வடக்குமாகாண முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் இருந்த காலத்திலேயே வெடுக்குநாறி மலை தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது. விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கிய வடக்கு மாகாணசபை அரசியல்வதிகள் மக்களின் வழிபாட்டுக்கு நிரந்தரத்தீர்வை பெற்றுக்கொடுக்காமல் வெடுக்கநாறி மலையை வைத்து அரசியல் செய்ததன் விளைவு இன்று தமிழர் வழிபாட்டுத்தலம் நாறிப்போயுள்ளது. தமிழ் அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் இடங்களை குறித்து எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாகவே உள்ளனர்.

வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கு தடைவிதிக்கும் நோக்கத்தை தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசார் கைவிட்டு தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதுடன் இனமத நல்லிணக்கத்தை பேண பொலிசார் ஒத்துழைப்பு வழங்க முன் வரவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தமிழ் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தவது எப்போதுமே இன மத நல்லிணக்கத்தை இலங்கை தீவில் உருவாக்காது என்பது கடந்த காலம் எமக்கு கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கின்றது.

– செந்தீ குணா-

Comments (0)
Add Comment