வவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டார்கள்:உப தவிசாளர் ஆதங்கம்!!

தவிசாளர் பதவியை விட்டுத்தருவதாக எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்து தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்ட வவுனியா நகரசபைத் தவிசாளர் இரண்டு வருடங்களின் பின்னர் பதவியை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டி வருவதாக உப தவிசாளர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து வவுனியா நகரசபை உபதவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,

ஆளும் கட்சியான எம்மால் நகரின் அபிவிருத்திப் பணிகளை திட்டமிட்ட வகையில் செயற்படுத்த முடியவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இதில் பலர் வாய்ப்பேச்சுப் படி நடந்துக்கொள்ளவில்லை.

தமிழர் விடுதலை கூட்டணியில் தேர்தலில் களமிறங்கிய வவுனியா நகரசபைத் தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே . காதர் மஸ்தான் ஆகியோருக்கிடையில் ஐந்து கட்சிகள் இணைந்து எழுதப்படாத வாக்குறுதிக்கு அமைவாக இரண்டு வருடங்கள் தவிசாளராக கடமையாற்றுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக நகரசபை தவிசாளருக்கு இடமளிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக தற்போது உப தவிசாளருக்கு தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி எழுதப்படாத வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் தற்போதைய தவிசாளர் அப்பதவியை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை.

இதனால் எதிர்பார்த்து காத்திருந்த தவிசாளர் பதவி கிடைக்கவில்லை . இது குறித்து இணக்கம் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் தவிசாளர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் வாக்குறுதியளித்த படி தவிசாளர் பதவி கிடைக்கவில்லை.இது குறித்து தவிசாளருடன் கலந்துரையாடிய போது எவ்விதமான எழுத்தும் ஒப்பந்தத்தில் இல்லை விட்டுக்கொடுப்பதற்கு என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தவிசாளர் எனது சொல் கேட்பதில்லை என்று பதில் கிடைத்துள்ளதுடன், தற்போது இவ்விடயம் குறித்து தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியிடம் கேட்க வேண்டும் என்றும் பதில் கிடைத்துள்ளது.

எது எவ்வாறு இருந்தாலும் வாய்ப்பேச்சுக்கு மதிப்பளித்து தவிசாளர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் உப தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment