நேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்!!

ஒரு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே தனது சகோதரரை கைதுசெய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த நாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இப்ராகிம் என்ற வர்த்தகர் எனது சகோதரருக்கு 7 முறை தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைதுசெய்திருந்தனர். இரு தினங்களில் விடுவிக்கப்படுவர் என்று அழைத்து செல்லப்பட்ட நிலையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

என்னுடைய சகோதரர் நிரபராதி எந்தக்குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே சொல்லியிருந்தேன். எவ்வாறான விசாரணைகளிற்கும் அவர் ஒத்துழைப்பினை வழங்குவார் என்றும் சொன்னேன். அந்த வகையில் 5 மாதங்கள் கழித்து எந்தக் குற்றசாட்டுடனும் அவர் தொடர்பில்லை என்றவகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும் போது குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் சொல்கிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டு 5 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் பாரதூரமானது பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே அதன் விசாரணைகளில் யாரையும் சந்தேகப்படமுடியும் அந்த விசாரணைகளிற்கு ஒத்துழைக்க வேண்டியது நாட்டின் பிரஜைகளுடைய கடமை. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்தவிடயத்திற்கு எனது சகோதரரோ நானோ இடைஞ்சலாக இருக்கமாட்டோம் என்றார்.

இதேவேளை இந்த அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்ட நிலையில் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment