வவுனியா இராசேந்திரங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பொலிசார் தடை!! (படங்கள்)

வவுனியா இராசேந்திரங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பொலிசார் தடை: வைத்தியசாலை பணிப்பாளரின் உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியா, இராசேந்திரம் குளம் பகுதியில் உள்ள மயானத்தில் வைத்தியசாலை மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்த போது பொலிசார் ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதித்தனர்.

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் மக்கள் குடிமனைகளையண்டியதாக காணப்படும் மயானத்தில் வவுனியா வைத்தியசாலையால் சத்திரசிகிச்சை மற்றும் உடல் கூற்று பிரேத பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது பெறப்படும் மனிதக் கழிவுகளால் கொட்டப்படுவதால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் அவை கொட்டப்படுவதால் விலங்குகள், காற்று, நீர் என்பவற்றின் காரணமாக அவை மக்கள் குடியிருப்புக்களில் பரவல் அடைவதாகவும் அதனால் தமக்கும் நோய் ஆபத்துக்கள் வரும் எனவும் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க இராசேந்திரம் குளம் மயானம் முன்பாக வந்திருந்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிசார் கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது என தடை விதித்தர். சுகாதார வழிமுறைகளை பேணி ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்த போதும் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அவ்விடத்திற்கு வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் விக்டர்ராஜ் அம் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதுடன், இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா வைத்தியசாலைப் பணப்பாளர் நந்தகுமார் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். இது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதுடன், மக்களும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment