ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நியமனக் கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!!

சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், நியமனக் கடிதங்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி தெரிவு செய்யப்பட்ட 34 ஆயிரத்து 818 பேருக்கான நியமனக் கடிதங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

25 துறைகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு, திறன்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் 6 மாத பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பயிற்சிக்காலத்தில் பயனாளர்களுக்கு 22, 500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதுடன், பயிற்சியின் பின்னர் NVQ III தரத்திலான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படும்.

இந்த வேலைத்திட்டம் ‘வறுமையற்ற இலங்கை’ என்ற எண்ணக்கருவில், ஜனாதிபதியின் சுபீட்சமான தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்டது.
இதன் பிரதான நோக்கம் குறைந்த வருமானம் பெறும் நபர்களின் வருமானத்தை அதிகரித்து, சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களை மையப்படுத்திய பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதாகும்.

இந்தத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment