ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்! (படங்கள்)

அமெரிக்கா அதிபர் தேர்தலில் சீனாவை கடுமையாக சாடிக் கொண்டிருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னமும் சீனா வங்கிகளில் தொடங்கப்பட்ட கணக்குகளை பராமரித்துவருவதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் (ஜோ பைடன்) களத்தில் உள்ளனர்.

சீனா சார்பு ஜோ

பிடன் ஜோ பிடனை சீனா சார்பாளர் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அத்துடன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க இருக்கும் இந்தியர்களிடமும், காஷ்மீர் பிரச்சனையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு தந்தவர் டிரம்ப் என்கிற பிரசாரமும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சீனா வங்கி கணக்கு

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஆவணங்களுடன் பகிரங்கப்படுத்தியது. இதில் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான Trump International Hotels Management LLC- ன் சீனா வங்கி கணக்கு விவரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2013-15-ம் ஆண்டுகளில் 188,561 அமெரிக்கா டாலர்கள் வரியாக சீனாவில் இந்த வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்பட்டிருக்கிறது.

சீனா வங்கி கணக்கு குறித்து விளக்கம்

இது தொடர்பாக Trump International Hotels வழக்கறிஞர் Alan Garten கூறுகையில், ஆசியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய சீனா வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது. சீனாவில் செயல்படும் அலுவலகமானது உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த வங்கி கணக்கை பயன்படுத்தி வந்தது என விளக்கம் தந்திருக்கிறார். ஆனால் 2015-க்குப் பிறகு இந்த வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிடத்தக்க பரிமாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

திருப்பி தாக்கிய பூமராங்

சீனாவுக்கு தம்மை எதிரியாக தொடர்ந்து காட்டி வருகிறார் டிரம்ப். கொரோனா தொடர்பாக சீனாவை உச்சகட்டமாக விமர்சித்தவர் டிரம்ப். இப்போது டிரம்ப்பின் சீனா வங்கிக் கணக்கு விவரங்கள் பூமராங் போல திரும்பி அவரையே தாக்க தொடங்கி இருக்கிறது.

Comments (0)
Add Comment