உற்சாகம் கொடுக்கும் டீ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு உற்சாகத்தை கொடுக்க கூடியதும், ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை போக்கவல்லதும், இதயத்துக்கு இதம் தரும் தன்மையை கொண்டதுமான டீயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

டீ பல்வேறு நன்மைகளை கொண்டது. இது உற்சாகத்தை தருவதாக அமைகிறது. காபியை விட இதில் காபின் என்ற வேதிப்பொருள் குறைவாக உள்ளது. டீ உடலுக்கு உற்சாகத்தை தருவதுடன் தலைவலியை போக்குகிறது. அடிக்கடி டீ குடிப்பதால் சிறுநீரக கற்கள் வரவாய்ப்புள்ளது. எனவே, காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் அருந்துவது மிகவும் நல்லது. டீ குடிப்பதால் நெஞ்சக சளி கரையும். ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை போக்குகிறது. இதய நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மனதிற்கு உற்சாகத்தை தருகிறது.

துளசி, ஏலக்காயை பயன்படுத்தி புத்துணர்வை தரும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: டீத்தூள், துளசி, ஏலக்காய், பனங்கற்கண்டு அல்லது தேன், பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீர்விட்டு சிறிது துளசி இலைகள், ஏலக்காய் தட்டி போடவும். இதனுடன் டீத்தூள், பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்க்கவும். இதை வடிகட்டி பால் சேர்த்து குடித்துவர உற்சாகம் ஏற்படும். இந்த தேனீர் ஆஸ்துமா பிரச்னைக்கு மருந்தாகிறது. ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. நரம்பு கோளாறுகளுக்கு தேனீர் பயன்தருகிறது. தேனீரை அளவுடன் பயன்படுத்துவது நல்லது.

தனியாவை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: டீத்தூள், தனியா, இஞ்சி, பனங்கற்கண்டு, பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீர்விடவும். இதனுடன் சிறிது தனியா, இஞ்சி நசுக்கிப் போடவும். டீத்தூள், சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்காமல் இருப்பது நல்லது. இந்த தேனீரை வடிகட்டி பால் சேர்க்கவும். இதை குடித்துவர உள் உறுப்புகளை தூண்டும். ஈரலுக்கு பலம் தருகிறது.

சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்கிறது. இனிப்பு சேர்க்காமல் டீயை குடிக்கும்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. உற்சாகத்துக்காக பயன்படுத்தும் டீயில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதிமதுரம், சித்தரத்தையுடன் தேயிலை சேர்த்து தேனீராக்கி குடிப்பதால் உடலுக்கு நல்ல பயன் கிடைக்கும்.
வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைகள் இருக்கும்போது குடலை இறுக்கிப்பிடித்து விட்டுவிட்டு வலிக்கும். இப்பிரச்னைகளுக்கு இளநீர், கற்கண்டு மருந்தாகிறது. கடுமையான வலி ஏற்படும்போது, இளநீரில் கற்கண்டை பொடித்து சேர்த்து கலந்து ஓரிருவேளை குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுகடுப்பு சரியாகும்.

Comments (0)
Add Comment