செரிமானத்தை தூண்டும் நுனா!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு, மாந்தம், கண்களில் ஏற்படும் தொற்று பிரச்னைகளை போக்கும் தன்மை கொண்ட நுனா மரத்தின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தோட்டத்தில், சாலையோரங்களில் இருக்கும் மரம் நுனா. பல்வேறு நன்மைகளை கொண்ட இதன் பூக்கள் மல்லிகையை போன்று இருக்கும். நுனா மரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக விளங்குகிறது. நுனா பூக்கள் கண்களுக்கு மருந்தாகிறது. இதன் பழம் உள்நோய்களை போக்கும் தன்மை உடையது. நுனா இலைகள் காய்ச்சல், கழுத்து வீக்கத்தை சரிசெய்யும். நுனா இலைகளை தேனீராக்கி குடிப்பதால் பல்வேறு மருத்துவ பலன்கள் கிடைக்கும்.

நுனா இலைகளை பயன்படுத்தி வயிறு மாந்தம், வாத குடைச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நுனா இலைகள், பூண்டு, வசம்பு பொடி, பனங்கற்கண்டு.செய்முறை: நுனா மரத்தின் இலைகளை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பூண்டு பற்கள் தட்டி சேர்க்கவும். கால் ஸ்பூன் வசம்பு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி எடுக்கவும். செரிமான பிரச்னை, மாந்தம், வாதக் குடைச்சல், கழிச்சல் இருக்கும்போது இதை காலை, மாலை வேளையில் உணவுக்கு முன்பு குடித்துவர இப்பிரச்னைகள் சரியாகும். நுனா இலைகள் அனைத்து வகை வயிற்றுப்போக்கையும் குணப்படுத்தும். செரிமானத்தை தூண்டும். வயிற்று வலியை குணப்படுத்தும். ஆயுளை வளர்க்கும். அற்புதமான மூலிகையான நுனா, மஞ்சனத்தி என்று அழைக்கப்படுகிறது. நுனா இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் கருப்பை புற்று வராமல் தடுக்கிறது.

நுனா பூக்களை பயன்படுத்தி கண்களில் ஏற்படும் தொற்று, சிவப்பு தன்மை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நுனா பூக்கள், சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: நுனா பூக்கள் 10 எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர விழிவெண் படலத்தில் ஏற்படும் வீக்கம் வற்றும். கண் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கண்களில் ஏற்படும் கட்டி இல்லாமல் போகும்.

நுனா பூக்கள் கண்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட நுனா பூக்கள் கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும். இந்த பூக்களை தேனீராக்கி கண்களை கழுவதுதன் மூலம் கண் எரிச்சல் இல்லாமல் போகும்.நுனா இலைகளை பயன்படுத்தி வெண்புள்ளிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நுனா இலைகள், நல்லெண்ணெய்.செய்முறை: நுனா மர இலைகளை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். இதை மேல்பூச்சு மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் வெண்புள்ளிகள் மறையும். தோல் இயல்பான நிலைக்கு மாறும். கழுத்தின் முன்பக்கத்தில் ஏற்படும் வீக்கம் குணமாகும். அடிபடுவதால் ஏற்படும் வலி, வீக்கத்துக்கான மருத்துவத்தை பார்க்கலாம். சிராய்ப்பு காயங்கள், வீக்கம் ஏற்படும்போது, வேர்க்கடலையின் இலைகளை நீர்விட்டு வதக்கி இளஞ்சூடாக எடுத்து மேல்பற்றாக போடுவதால் வீக்கம் வற்றிப்போகும்.

Comments (0)
Add Comment