மாநகர சுகாதார மேற்பார்வையாளர்கள் – முதல்வர் ஆனல்ட் விசேட கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் மாநகர சுகாதார மேற்பார்வையாளர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த (20) மாநகர பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் யாழ் மாநகர சுகாதார மேம்பாடுகள் தொடர்பிலும், காணப்படும் குறைபாடுகளை அடையாளம் செய்து நிறைவேற்றுவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட மேற்பார்வையாளர்கள், பொதுச் சுகாதாரப் பொறியியற் பரிவினர், சந்தை மேற்பார்வையாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தாம் பணிபுரியும் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறைபாடுகள், தேவைகள் தொடர்பில் விளக்கினர்.

அடையாளம் செய்யப்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பிலும், மாநகர சுகாதார ஊழியர்களின் மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும், மாநகர மேற்பார்வையாளர்கள் பணிபுரியும் நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைமைகள் தொடர்பிலும் முதல்வர் தெளிவுபடுத்தினார்.

சுகாதார பணிபுரியும் நேரங்களில் உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய நிர்வாக ரீதியான நடைமுறைகள் குறித்து மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர செயலாளர் ஆகியோர் விளக்கினர்.

குறித்த கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், செயலாளர், பொறியியலாளர், பொதுச் சகாதார பொறியியற் பிரிவு பொறுப்பதிகாரி, மாநகர சுகாதாரப் பகுதி உத்தியோகத்தர்கள், சந்தை மேற்பார்வையாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment