தினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா? (மருத்துவம்)

மனித வாழ்வில் குழப்பம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு குழப்பமான சூழலை கையாளுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று கிடையாது. அதற்காக அதனிடம் இருந்து தப்பித்து ஓடவும் முடியாது. எப்படியிருந்தாலும், எல்லா சூழல்களையும் சந்தித்தால் மட்டுமே அதனை கடந்து போக முடியும். கஷ்டத்தை கடக்க வேண்டுமென்றால், அதனை அனுபவித்தால் தானே முடியும். அப்படி தான், இந்த மன குழப்பமும். மனதில் ஏற்படக்கூடிய குழப்பத்தை விரட்ட மருந்தெல்லாம் ஒன்றும் கூறபோவதில்லை. அமைதி ஒன்றே அனைத்து விதமான சங்கடங்களுக்கும் தீர்வினை வழங்கிடும்.

எப்படிப்பட்ட குழப்பமான சூழலாக இருந்தாலும், வெறும் 15 நிமிடங்கள் போதும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு. உண்மை தான், வெறும் 15 நிமிடங்கள் அமைதியாக ஒருவர் உட்கார்ந்திருக்கும் பட்சத்தில், அவரது உடலில் உள்ள ஹார்மோன்கள் சாந்தமடைந்து மனதை அமைதிப்படுத்திடும். எந்தவிதமான குழப்பத்திலிருந்தும் உடலையும், மனதையும் இந்த செயல் சுலபமாக வெளிகொண்டு வந்து விடும். 15 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம், அதனைப் பற்றி தான் இப்போது தெளிவாக விளக்க போகிறேன். முழு கட்டுரையையும் படித்து விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மன அமைதி

முழு அமைதியுடன் தனியே உட்கார்ந்திருக்கும்போது நீங்கள் உணரும் முதல் விஷயம் மன அமைதி. ஓய்வின்றி நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்யும் போது, உங்கள் மூளை சோர்வடைவது போல தான் உங்கள் உடலும் சோர்வடைந்துவிடும். மன அமைதி அவற்றை ஒன்றாக புறந்தள்ள உதவும்.

அதிகரித்த விழிப்புணர்வு

குழப்பமான மனநிலை, விழிப்புணர்வை குறையச் செய்து, கவனச் சிதறலை உண்டாக்கிவிடும். அது போன்ற தருணங்களில், மனத்திற்கு அமைதி தரும் சூழலில் 15 நிமிடங்கள் அமர்ந்திருந்தால் விழிப்புணர்வு அதிகரிக்கும். எனவே, நீங்கள் ஓர் விஷயத்தில் கவனம் செலுத்துவதை கடினமாக உணர்ந்தால், 10-15 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து விடுங்கள். இதனால் ஏற்படக்கூடிய நேர்மறையான மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

மேம்பட்ட அறிவாற்றல்

தினந்தோறும் இத்தகைய அமைதி பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், உங்களது அறிவாற்றல் மேம்படக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 15 நிமிட மன அமைதியானது, மூளை உயிரணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், இது நியாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

குறையும் மன அழுத்தம்

சத்தம் நிறைந்த சூழல், மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. குழப்பமான சூழலில் இருக்கும் அனைவரும் எரிச்சலடைவதற்கு அது தான் காரணம். நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்தை உணரும்போது, இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து சென்று அமைதியான ஓர் மூலையைக் கண்டுபிடித்து அங்கு சென்று உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுபோன்ற தருணங்களில் மூளைக்கு அதிகப்படியான வேலையை கொடுக்காதீர்கள்.

தசை பதற்றத்தை குறைக்கும்

நீங்கள் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் ஒருவராக இருந்தால், சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து கொள்வது உண்மையாக மிகவும் தேவையான ஒன்று. வேலையினால் உண்டாகக்கூடிய பதற்றம் என்பது, உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இடையூறாக இருந்து, தசைக்கு பதற்றத்தை அதிகமாக தூண்டுகிறது. அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடுப்பதன் மூலம், மன அழுத்தம் மற்றும் பதற்றம் உடனடியாக குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

தூக்கமின்மைக்கான தீர்வு

மன அழுத்தம் நம் தூக்க சுழற்சியை நேரடியாக பாதிக்கக்கூடும். அதனால்தான் மனஅழுத்தத்தில் தவிக்கும் பெரும்பாலோர் தூங்குவது கடினமாக உணர்கிறார்கள். இந்த சிகிச்சையை தினமும் செய்வதால் நல்ல அமைதியான தூக்கத்தைப் பெற முடியும். தினசரி இதைச் செய்ய வேண்டியது அவசியம்.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்திடும்

வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் என்பது ஒருவரது இரத்த அழுத்தத்தின் அளவை உயர்த்திவிடும். அவற்றை உடனடியாக இயல்பாக்குவதற்கு, அமைதி பயிற்சி ஒன்று தான் சிறந்த வழி. இந்த அமர்வு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது. இது உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்துவதோடு, சுவாச முறைகளையும் மேம்படுத்த உதவுகிறது.

தலைவலியை உடனடியாக போக்கிவிடும்

அதிக வேலை மற்றும் அதிக அழுத்தம் தலைவலிக்கு வழிவகுக்கிறது மற்றும் இடைவிடாமல் வேலை பார்ப்பதால் ஏற்படக்கூடிய மனம் கஷ்டம் ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையை சரிசெய்ய சிறந்த மற்றும் எளிதான வழி என்னவென்றால், சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருப்பதுதான்.

உள்ளுணர்வு திறன்களுக்கான ஊக்கம்

ஒருவர் இழந்த உள்ளுணர்வு சக்திகளை மீண்டும் பெற ஒரே ஒரு வழி இருக்கிறது. அது தான், தனியாக சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது. உங்கள் மனசாட்சியுடன் நீங்களே பேசவதோடு, அதன் உள்நோக்கத்தையும் மேற்கொள்ளவும். இது உங்கள் உள்ளத்தை திறக்க உதவுவதோடு, உள்ளுணர்வையும் பெறுவீர்கள்.

மன நச்சுத்தன்மை

15 நிமிட அமைதி பயிற்சி என்பது, உங்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலைத் தூண்டச் செய்யும். இதனால், உங்கள் மனம் நச்சுத்தன்மையற்றதாக மாறிவிடும்.. உங்கள் மூளையை நச்சுத்தன்மையில் இருந்து காக்க விரும்பினால், எதிர்மறை எண்ணம் உடையவர்களிடம் இருந்து விலகி இருங்கள், சமூக ஊடக சலசலப்பு மற்றும் இந்த பயனற்ற விஷயங்கள் அனைத்திலிருந்தும் உங்களைத் தூர விலக்கி கொள்ளுங்கள். மனநோய்களில் இருந்து காத்துக் கொள்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையை நீங்கள் முழுமையாக அனுபவித்திட முடியும்.

Comments (0)
Add Comment