வவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

முடக்கப்பட்ட நிலையிலும் வவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

முடக்கப்பட்ட நிலையிலும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திற்குள்ளும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தகருக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடை எடுக்க வேண்டும் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பசார் வீதியில் முடக்கப்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 8 ஆம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன முடக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வவுனியா நகரின் பல பகுதிகளில் சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், நகரின் பல பகுதிகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் பசார் வீதியில் உள்ள குறித்த பிரபல வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையுடன் கூடிய மொத்த விற்பனை நிலையம் ஒன்று ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்தது. அந்நிலையமும் முடக்கப்பட்ட பகுதிக்குள் அமைந்திருந்தது. அங்கு பலர் வேலை செய்கின்றனர். ஆனாலும் குறித்த வியாபார நிலையத்தினர் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது களஞ்சியசாலையின் செயற்பாட்டை முன்னெடுத்ததுடன், அங்கு பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் நேற்றும், இன்றும் கடமைக்கு அழைத்திருந்தனர். கொரோனா அச்சம் காரணமாகவும் அரச அறிவித்தலின் பிரகாரம் குறித்த பகுதி முடக்கப்பட்டிருந்தமையாலும் பலர் குறித்த களஞ்சியசாலைக்கு கடமைக்கு செல்ல அஞ்சிய போதும் அவர்களை கட்டாயம் வரவேண்டும் என அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மொத்த விற்பனை மற்றும் களஞ்சியசாலையில் இருந்து வவுனியாவின் பல பகுதிகளுக்கும் முடக்க காலப்பகுதியில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று வெளியாகிய பிசீஆர் முடிகளில் குறித்த களஞ்சியசாலையில் இருந்த பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கட்டாயம் வரவேண்டும் என அழைககப்பட்ட நிலையில் சென்ற ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதா என்ற அச்ச நிலையில் பலரது குடும்பங்கள் தற்போது உள்ளன.

தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பொறுப்பற்ற விதமாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment