அடகொடுமையே… சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர்… எங்கனு பாருங்க!

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சாலையில் தூங்கிய நாய் மீது காரை ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரு ஹுலிமாவில் உள்ள டோடகம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகேஷயா. இவர் போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் நாகேஷயா, வீட்டின் அருகே தனது காரை ஓட்டிச்சென்றார். அப்போது சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் மீது அவர் காரை ஏற்றினார். நாய் மீது கார் ஏறியது தெரிந்தும் அவர் நிற்காமல் காரில் சென்றார். காரின் பின்பக்க டயர் ஏறியதால் அந்த நாய் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடியது.

அக்கம்பக்கத்தினர் அந்த நாயை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த நாய் தற்போது உயிருடன் உள்ளது. நாய் மீது நாகேஷயா கார் ஏற்றும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து நாகேஷயா மீது விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவு 429 ன் கீழும் (கால்நடைகளை கொல்ல முயற்சி அல்லது துன்புறுத்துதல்) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தான் வேண்டுமென்றே நாய் மீது காரை ஏற்றவில்லை என்றும் அதை கடந்து செல்ல முயன்றபோது தவறுதலாக கார் ஏறி விட்டதாகவும் நாகேஷயா தெரிவித்தார். நாய் மீது காரை ஏற்றிய நாகேஷயா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.

Comments (0)
Add Comment