பதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி வாங்கும் அமெரிக்கா!!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க, 200 மில்லியன் கூடுதல் தடுப்பூசி டோஸ் வாங்க அதிபர் பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கணடறிந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், முன்பு பரவிய வைரஸை விட உருமாறிய கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்றும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்கா கூடுதலாக 200 மில்லியன் கோவிட் தடுப்பூசி டோஸ்களை வாங்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer and Moderna ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் தலா 100 மில்லியன் டோஸ் வாங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கான மொத்த தடுப்பூசி ஆர்டரில் 50 சதவிகிதத்தை அதிகரிக்கிறது. இதன்மூலம், கோடைக் காலத்திற்குள் 400 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தற்போது 600 மில்லியன் டோஸ் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பல்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் வாராந்திர தடுப்பூசி விநியோகத்தை 8.6 மில்லியன் அளவிலிருந்து 10 மில்லியனாக பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 1.4 மில்லியன் டோஸ் அதிகரித்துள்ளது. இது, முன்னர் எதிர்பார்த்ததை விட மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட வழிவகுக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment