டெல்லி பேரணியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி – திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பரிதாபம்..!

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து பலியானார்.

இறந்த அந்த விவசாயி உத்தரபிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டம் திப்திபா கிராமத்தை சேர்ந்த நவ்ரீத் சிங் (வயது 27). உயர்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற அவர், விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததால் சொந்த ஊர் திரும்பி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றபோது, டிராக்டர் கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே நவ்ரீத் சிங், போலீசாரின் கண்ணீர் புகைகுண்டு பட்டு உயிரிழந்ததாக ஒருதரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் டிராக்டர் கவிழ்ந்து நவ்ரீத் சிங் பலியான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டு போலீசார் மறுத்துள்ளனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சக விவசாயிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Comments (0)
Add Comment