“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.01.2018)

இன்று வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் பிரதமர் லி ஹியங் லுங் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இவரது வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்படும்.

இலங்கை வருகை தரவுள்ள சிங்கப்பூர் பிரதமர் லி ஹியங் லுங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினமும் நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடதக்கது.

வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்

இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக, ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வு வழங்காமையாலேயே, இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை சுமார் 53,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலை வழங்காதுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவதற்கான சுற்றரிக்கை இவ்வாரத்திற்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றரிக்கையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பதுளை தமிழ் மகளிர் கல்லூரி அதிபரின் விடயத்தை முன்னிலைப்படுத்தி ஊவா மாகாணத்தில் தமிழ் மக்களின் கௌர வத்தை இழிவுபடுத்தி விட்டதாக தெரிவித்துள்ள ஊவா கல்வி அபிவிருத்தி மன்றம், இவ்விடயத்துடன் தொடர்புபட்ட முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பதுளை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனை ஊவா மாகாண கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் ஆசிரியர் சமூகத்தினர் வர்த்தக பிரமுகர்கள், நலன்விரும்பிகள்,பெற்றோர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக மன்றம் அறிவித்துள்ளது.

பாடசாலை வாளாகத்திலிருந்து கண்டன பேரணி ஆரம்பமாகி ஊவாமாகாண சபைவரை சென்று அங்கு எதிப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகள் விநியோகம்

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது.

அதன் முதல் கட்டமாக நேற்று ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.

தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment