“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (22.01.2018)


மன்னார் – வவுனியா பிரதான வீதியில் விபத்து ; இருவர் காயம்

மன்னார் – வவுனியா பிரதான வீதியில் பட்டானிச்சூடு பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் கருத்து

ஜனாதிபதியாக நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது, வெளிநாட்டுக் கடன்களின் அளவு தற்போதைய வெளிநாட்டுக் கடன்களின் அளவை விட அதிகமாக காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நூற்றுக்கு 103 சதவிகிதமாக இருந்த வெளிநாட்டுக் கடனை தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும் போது நூற்றுக்கு 70 சதவிகிதமாக, தான் குறைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமையலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார், மடு – பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் குறித்த பெண் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த வேளையியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தில் நிலவும் பிரதான பிரச்சினை சரியான தலைமைத்துவம் இல்லாமையே! -கோட்டாபய

சரியான தீர்மானம் எடுக்க முடியாமை மற்றும் சரியான தலைமைத்துவம் இல்லாமையே அரசாங்கத்தின் பிரதான பிரச்சினை என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே, கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள்

யாழ் மாவட்டத்தில் இன்று (22) முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள் சுமூகமாக இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 17273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை செலுத்தினர்.

இதன்படி அடுத்தகட்டமாக எதிர்வரும் 25,26ம் திகதி ஏனைய தபால் மூல வாக்காளர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் தங்கள் வாக்குகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவத்தார்.

Comments (0)
Add Comment