“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (23.01.2018)


யாழ் பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில்

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட சிங்கள மாணவர்கள் நால்வரை, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்காம் வருட மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், நீதவான் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

மீனவச் சட்டத்தை திருத்துவது தொடர்பான பிரேரணை நாளை சபையில்

மீனவச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பான பிரேரணை நாளை (24) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் எல்லையில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல், நாட்டில் கடற் பகுதியில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்தைப் பாதுகாத்தல் போன்ற நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால், கொழும்பு – லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் மனு தள்ளுபடி

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சில பகுதிகளில், தமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இதன்படி, பாணதுறை, அகலவத்தை, மஹியங்கனை மற்றும் திறப்பனை ஆகிய பகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலேயே, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனுமதியின்றி ஒருதொகை சங்குகளை வைத்திருந்தவர் கைது

தங்காலை நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, உரிய அனுமதியின்றி ஒருதொகை சங்குகளை தன்னகத்தே வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் உரிய அனுமதியின்றி பல்வேறு வகையான சங்குகளை தனது வீட்டில் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் வன ஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments (0)
Add Comment