“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (23.01.2018)


சாமர சம்பத் பிணையில் விடுதலை

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, அவர் இன்று பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து, அவரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை, பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

105 பொலிஸாருக்கு இடமாற்றம்

105 பொலிஸ் அதிகாரிகளுக்கு தற்காலிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உறவினர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளின் உறவினர்கள் அவர்கள் கடமை புரியும் பகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிலையத்திற்கு ‘சீல்’ வைப்பு

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்தமையால் நுகெகொட கம்சபா சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று இரவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினாரால் சுற்றிவளைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது.

பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மேலதிக விசாரனைகளுக்காக எரிபொருள் நிலையத்திலிருந்து சில பெற்றோல் மாதிரிகளை இரசாயனப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மொட்டு வேட்பாளர் கைது

பொதுஜன பெரமுன கட்சியில் நவத்தேகம பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவத்தேகம – காமினிபுர பகுதியில் தேர்தல் சுவரொட்களை ஒட்டிக்கொண்டிருந்தபோதே பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலக சுகாதார தினம் இலங்கையில்

2018ஆம் ஆண்டிற்கான உலகசுகாதார தினமானது இலங்கையில் அனுஷ்டிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபானம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் ஜெனீவா நகரில் நடைபெற்ற 142வது அமர்விலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டள்ளது.

உலக சுகாதாரத் தினமானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும்.

இந்த நிலையில், உலக சுகாதார தினத்தை அனுஷ்டிப்பதற்கான தகுதியுள்ள நாடு இலங்கையென உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் ஹடிஹெனோமி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment