“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (23.01.2018)


ஹெரோயின் கடத்தியவருக்கு மரணத்தண்டனை

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு ஹெரோயினைக் கடத்தி வந்து கொழும்பின் பல இடங்களிலும் விநியோகித்த நபருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (23) மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளினால் சமூகம் பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டிய நீதவான் குறித்த நிலையிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பதற்குரிய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணமாக இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாஸ்டர் என்றழைக்கப்படும் செயிக் இஸ்மாயில் அக்பார் என்பவருக்கே இவ்வாறு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் திகதி முகத்துவாரம் ரஜமல்வத்தை பிரதேசத்தில் 51.88 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தக் குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக நீதிமன்றத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நாளை புகையிரத பணிப்புறக்கணிப்பு

பிரதான கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து நாளை (24) மாலை 4 மணியின் பின்னர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகளின் சேவை காலத்தினை நீடிக்காமை, புதியவர்களை பணியில் இணைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

கரடியனாறில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சாரதிகள் கைது!!!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவில் நேற்று சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு உழவு இயந்திரங்கள் மணல் ஏற்றப்பட்ட இழுவைப்பெட்டிகளுடன் கைப்பற்றப்பட்டதுடன் எட்டு சாரதிகளும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளிடம் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் காணப்பட்டபோதிலும் சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் குழுவினர் முந்தன் குமாரவெளி ஆற்றிற்குள் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் சாரதிகளையும் கைதுசெய்து கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை புத்தம்புரி ஆற்றுக்குள் மணல் அகழ்ந்த சாரதிகளும் உழவு இயந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சாரதிகள் எட்டு பேரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட சாரதிகளை நாளை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால் இன்று (23) உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை என நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

பிரசாரக் கூட்டத்துக்கு இடையூறு: தோட்டத் தலைவர் கைது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்புக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர் ஒருவரை, பொகவந்தலாவை பொலிஸார், இன்று (23) கைதுசெய்தனர்.

பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தின் தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இ.தொ.காவின் மக்கள் சந்திப்பு, இன்றுக் காலை 10.30 மணிக்கு, தெரேசிய தோட்டத்தில் இடம்பெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதேச மக்களை, தேயிலை மலைகளுக்குச் சென்று சந்தித்தார்.

இதன்போது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர் ஒருவர், பிரசாரக் கூட்டத்துக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியையும் தகாத வார்த்தைகளால் திட்டினாரென, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரைக் கைதுசெய்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாகாணசபை உறுப்பினர் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் மாகாண சபை உறுப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால், மாகாணசபை உறுப்பினர் முறைப்பாடு செய்துவிட்டுத் திரும்பும்வரை, பொலிஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

இந்த மக்கள் சந்திப்பில், இ.தொ.காவின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரனியுமான பி.ராஜதுறை ஆகியோரும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், தெரோசியா தோட்டத்தில் நடைபெற்ற குளறுபடி காரணமாக, ஏனைய தோட்டங்களில் நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டங்களை இரத்துச் செய்துவிட்டு, ஆறுமுகன் தொணடமான் எம்.பி மீண்டும் திரும்பினார்.

Comments (0)
Add Comment