“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (24.01.2018)

புகையிரத சாரதிகளின் கலந்துரையாடல் வெற்றி..!!

புகையிரத சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத அதிகாரிகளுக்கு இடையில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பணியாளர்களின் சேவை காலத்தை நீடித்து தருமாறும், சீனாவில் தயாரிக்கப்பட்ட புகையிரதங்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக, இன்று அதிகாலை பயணிக்கவிருந்த 7 புகையிர சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்று காலை புகையிரத பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒரு கோரிக்கைக்கு தீர்வு காண முடிந்ததாக லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கம் தெரிவித்தது.

மருத்துவ கல்வி, மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள்..!!

மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு, அவை தொடர்பான விபரங்கள் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறும்..!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை 25 ஆம் திகதியும் நாளை மறுதினம் 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றும் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பேரணிக்கு தடையுத்தரவு ..!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு கோட்டை மற்றும் நுகேகொடை நீதிவான் நீதிமன்றங்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் நாளை ஏற்பாடுசெய்துள்ள பேரணிக்கே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலம் நெருங்கும் நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் செல்வதற்கு தடைவிதிக்கபட்டுள்ள நிலையிலேயே பொலிஸாரின் வேண்டுதலுக்கமைய இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகத்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Comments (0)
Add Comment