பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (26.01.2018)

முன்னாள் பிரதியமைச்சர் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த இரண்டு வழக்குகளும் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அதன்படி பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 12 இலட்சத்து 78,000 ரூபா நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 10 இலட்சத்து 90,000 ரூபா நிதியை பயன்படுத்தி நாட்குறிப்பு புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு திகதி குறிப்பு

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர உதவி புரிந்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி வழங்கியுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருத்தல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி நடைபெறும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

முறைப்பாட்டின் முதலாவது சாட்சியாளரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் 08 பேரும் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட 08 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுட அபராதமும் விதிக்கப்பட்டது.

அதன்படி இன்றைய தினம் அவர்கள் அபராதத் தொகையை செலுத்திய பின்னர் நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கடற்றொழில் சட்டங்கள் திருத்தப்படுவதை இடைநிறுத்தவும்

இலங்கையில் கடற்றொழில் சட்டங்கள் திருத்தப்படுவதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கமாறு, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய வெளிவிவகார அமைச்சினை வலியுறுத்தியுள்ளது.

அதன் செயற்பாட்டுத் தலைவர் எம்.கே.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழில்ல ஈடுபடுகின்ற படகுகளுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்டத்திருத்தம் குறித்து தாம் அதிர்ச்சியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை இலக்கு வைத்தே இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காதிருக்கிறது என்று ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணேசமூர்த்தியை தாக்கியவர்களுக்கு நேர்ந்த கதி

ஊவா மாகாண சபை வளாகத்தில் வைத்து நேற்று, ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.கணேஷமூர்த்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் அவர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஏ. கணேஷமூர்த்தி தொடர்ந்தும் பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊவா மாகாண சபை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற முறுகலின் போது மாகாண சபை உறுப்பினர்களான ஏ.கணேஷமூர்த்தி மற்றும் உபாலி சேனாரத்ன உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.

மதுசை கைது செய்ய எழுத்து மூல அறிவித்தல்

கும்புருபிட்டிய மதுஸ் என்பரை கைது செய்யவதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட எழுத்து மூல அறிவித்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் கடந்த 16 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் முன்னிலையாகாததால், அதனை மின்னணு மற்றும் அச்சு ஊடகம் வழியாக பொது மக்களுக்களிடம் பிரசித்தப்படுத்துவதற்காகவே மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மனித கொலை தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக கும்புருபிட்டிய காவல்துறையால் மாத்தறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சந்தேக நபர் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment