பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (01.06.2018)

100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்

அன்று மாற்றத்துக்குக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டதாகவும், நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

யாராவது அந்த செயற்திட்டத்துடன் இருக்கவில்லை என்று கூறினால் அது தொடர்பில் அவர்களிடம் கேட்குமாறும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிக்கினார்

தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது றத்மலானை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த லமாஹேவாகே நிகால் திசாநாயக்க எனும் பெபா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடம் 02 கிராமும் 660 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ள பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (01) இரவு 07.00 மணிமுதல் நாளை காலை 07.00 மணிவரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம் பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகியநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது

மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கோல்டன் பீகொக் (Golden Peacock) பதக்கம் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இல. 24 லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் வைத்து அவரின் மனைவி சுமித்ரா பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ​ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் கடந்த 02ம் திகதி அவருடைய இறுதிக்கிரியையின் போது காணாமல் போயிருந்தது.

அதன்பின்னர் கடந்த 05ம் திகதி கொள்ளுப்பிட்டி – கடுவலை மார்க்கத்திலான 177ம் இலக்க தனியார் பஸ் ஒன்றில் இருந்து இந்தப் பதக்கம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

Comments (0)
Add Comment