பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (03.06.2018)

அர்ஜுன் அலோசியஸுடன் உரையாடியோரின் ’பெயர்களை உடன் வெளியிடுக’

பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத் தலைவர் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்ப் பட்டியலை அரசாங்கம் உடன் வெளியிட வேண்டும் என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி அங்கும்புரையில் அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது பெயர்களையும் அரசாங்கம் உடன் வெளியிடவேண்டும். இல்லையென்றால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதனால் அவப்பெயர் ஏற்பட்டும். பச்சை, நீலம், சிவப்பு உறுப்பினர்களின் கைவரிசையை, பெயர்ப் பட்டியல் வெளியான பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் அரசியல், கல்வி தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், “கிராமப்புற மாணவ, மாணவிகளே, இன்று சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும், பல்கலைக்கழகப் படிப்பிலும் முன்னிற்கின்றார்கள். நாட்டின் ஆட்சி, இந்த இளம் தரப்பினர் கையில் வரவேண்டும்.

“இன்று எமது மக்கள் மத்தியில ஊடுருவியுள்ள ஒரு குடும்பத்துக்குதான் ஆட்சி, குறிப்பிட்ட கல்லூரியில் படித்தவர்களுக்குத் தான் ஆட்சிசெய்ய முடியும் என்ற மனப்பாங்கு நீக்கப்படவேண்டும். அவ்வாறு நாட்டின் ஆட்சியை குடும்ப ஆட்சியில் இருந்து விலக்கி, திறமைமிக்கவர்களின் கைகளில் கொடுத்தால் இந்நாட்டை பத்தே ஆண்டுகளில் சிங்கப்பூரை விடவும் முன்னிலைக்கு கொண்டுவர முடியும்” என்றார்.

அரை சொகுசு பஸ்களின் இடைநிறுத்ததுக்கு வரவேற்பு

அரை சொகுசு பஸ்களை சே​வைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நடவடிக்கைத் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக கொழும்பு மாவட்ட பயணிகள் பஸ் சங்கத்தின் செயலாளர் கெமுனு பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

குறித்த சொகுசு பஸ்களில் திரைச்சீலைகள் மற்றும் ஆசனங்களே மாற்றப்படுவதுடன், பயணிகளுக்கு வேறு எவ்வித வசதிகளும் இந்த பஸ்களில் கிடைப்பதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு பஸ்கள் தொடர்பில் பயணிகள் அதிகம் விமர்சனங்களையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரை சொகுசு பஸ்களை மாத்திரமல்ல சொகுசு பஸ்களை அரசாங்கம் தடைசெய்ய வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகில் வேறு எங்கும் இதைப்போன்ற அதிசொகுசு பஸ் சேவைகளை காணமுடியாது. ஏனைய நாடுகளில் சாதாரண பஸ்களும்,சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுபடுகின்றன. இலங்கையில் மக்களிடம் கொள்ளையடிப்பது அரை சொகுசு பஸ்களும், சொகுசு பஸ்களுமே என​வே இவை இரண்டையும் தடைசெய்யவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சேவையில் ஈடுபடும் பஸ்ஸை ஒரே தடவையில் இடைநிறுத்துவதற்கு நியாயமான ஒன்றல்ல என்றும், இதுதொடர்பில் பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக, அனைத்து மாகாண தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார தெரிவித்துள்ளார்.

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழையினால், ஏற்பட்டிருந்த அசாதாரண காலநிலையை தொடர்ந்து, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை, 350 ‌ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை புத்தகங்களுக்கு பற்றாக்குறை

பாடசாலை புத்தகங்களுக்கு கடுமையான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும், 41,189,027 புத்தகங்கள் தேவைப்படுகின்ற நிலையில், 28,210,600 புத்தகங்களே அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரம் ஒன்றுக்கு தேவையான, 8,802,100 புத்தகங்கள், தரம் நான்குக்கு தேவையான, 6,432,000 புத்தகங்கள், தரம் ஒன்பதுக்கு தேவையான, 2,630,000 புத்தகங்களும் இன்னும் அச்சிடப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.பீ.க்கு பொருளாளர் பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)
Add Comment