பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (04.06.2018)

ஒன்றிணைந்த எதிரணியினர் ஓரங்கட்டப்பட்டனர்

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நேற்றைய புதிய அதிகாரிகள் தெரிவின் போது ஓரங்கட்டப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் அகில இலங்கைச் செயற்குழு ஆகியன நேற்று (03) கூடின.

இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வ​கிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

‘உண்மையை கூறுவோம்’

‘உண்மையைக் கூறுவோம்’ எனும் தொனிப்பொருளில், நாடளாவிய ரீதியில் பிரசார நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தியமை முதல் இன்று வரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அன்றிலிருந்து இன்றுவரையிலும் செய்தவற்றை பலரும் இன்று மறந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பணி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், கட்சியின் பிரசார செயலாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம், கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று (04) ஆரம்பித்துவைக்கப்படும். இந்த வேலைத்திட்டத்தின் போது, நாட்டின் நிலைமை, அரசாங்கத்தின் செயற்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

10க்கு முன்னர் சம்பளத்தை வழங்கவும்’

ரமழான் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ​கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை, அவ்வமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளது.

அத்துடன் அதன் பிரதிகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியனவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, முஸ்லிம் மக்களின் சமூக மற்றும் நலன்புரி விடயங்களிலும் அவர்களின் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற அமைப்பாகும்.

இந்நிலையில், ரமழான் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

‘118 பேரின் விவகாரம் கருத்தடை மாத்திரை போன்றது’

118 பேரின் பெயர்கள் அடங்கிய அறிக்கையை, தான் கோரியுள்ளதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த விவகாரம், அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை மாத்திரை போன்ற, போலியான விவகாரமாகும் என்றார்.

அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற நல்லெண்ணக் கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றதாக கூறப்படும், 118 பேரின் பெயர்கள் அடங்கிய அறிக்கையை நான் கோரியிருக்கின்றேன்” என்றார்.

“அர்ஜுன் அலோசியஸூடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. அவற்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்” என்றார்.

“பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, தனக்கு அனுப்பிவைக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரியுள்ளேன். அந்த அறிக்கை விரைவில் கிடைக்கும். அறிக்கை கிடைத்தவுடன், நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பிப்பேன்” என்றார்.

Comments (0)
Add Comment