பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (04.06.2018)

சுதந்திரக் கட்சி நெருக்கடியில் – ஜனாதிபதியின் தலைமையில் தீர்வு திட்டங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஒரு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பம் முதலே இந்நிலை காணப்படுவதாகவும், கட்சியின் புதிய செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்று (04) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்போது கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 2020 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இதற்கு பதிலளிக்க வேண்டிய சரியான தருணம் இது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கான புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கான புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இன்று (04) நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதனடிப்படையில் தேர்வுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமினி விக்கிரமசிங்க, எரிக் உப்பஷான்த, சந்திக ஹதுருசிங்க மற்றும் ஜெரில் வேடர்ஸ் ஆகியோர் புதிய தேர்வுகுழுவின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வுக்குழுவினரின் பதவிக்காலம் மே மாதம் 16 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

’மஹிந்தவை பிரதமராக்க வேண்டும்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

’தேவைக்கு மாத்திரமே இராணுவ பேச்சாளர்’

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இராணுவப் பேச்சாளர் பங்கேற்பார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அனைத்து வாராந்த ஊடக சந்திப்புகளிலும் இராணுவப் பேச்சாளர் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் இதன் பின்னர், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் இராணுவப் பேச்சாளரை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்புகளில் பங்கேற்கச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இது புதிய தீர்மானம் அல்லவெனவும், இது ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் தெரிவித்துள்ள இலங்கை இராணுவம் அதனை தற்போதே அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

’சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவே எனது கடமை’

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது குழப்பநிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹன லக்‌ஷ்மன் பியதாச கட்சியின் ஆரம்பகாலத்தில இருந்தே இந்த நிலைக்காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (04) தமது கடமைகளை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து உயர் பீடம் வரை அனைவரையும் ஒன்றிணைத்துகொண்டு பயணிப்பதற்காக செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலான பணியே தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி ரோஹன லக்‌ஷ்மன் பியதாச, அதுத் தொடர்பில் பதிலளிப்பதற்கு இன்னும் காலமிருப்பதாகத் தெரிவிததுள்ளார்.

Comments (0)
Add Comment