பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (05.06.2018)

ஊடகவியலாளரின் சடலம் மீட்பு

ஊடகவியலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஹேமனலின் கருணாரத்ன, இன்றைய தினம் (05) பகல் 12 மணியளவில் மில்கஹவத்தை – மாலபேயில் உள்ள அவரது வீட்டிலிருந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (04) இரவு அவரது வீட்டின் கதவு மூடப்படாமல் இருந்துள்ளதாகவும், இன்​று பகல் அவரது வீட்டைப் பரிசோதனையிட்ட போது, இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும், தெரிவித்த தலங்கம பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டவர் சிக்கினார்

கஹவத்தை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கஹவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், கஹவத்தை அட்டகலபன்ன பிரதேசத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து, உள்நாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் வகைத் துப்பாக்கி ஒன்றும் ரி 56 ரக துப்பாக்கியின் 03 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, அந்தத் துப்பாக்கி, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டதென்ற விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, அவரால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மற்றுமொரு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர், கஹவத்தை, கஹவத்துகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள், 29, 35 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கஹவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளை, 53 வாக்குகளைப் பெற்றார்.

ஆனந்த குமாரசிறியின் பெயரை, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.

Comments (0)
Add Comment