பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (06.06.2018)

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ் உத்தரவிட்டுள்ளார்.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் கருக்குளிய ஜயதிலகாராம விகாரையில் வைத்து, அப்போதைய ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளராக இருந்த தனசேன சுரசிங்க மீது தாக்குதல் நடத்தி கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோருக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடாத காரணத்தால் கைது செய்யப்பட்டு இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மே மாதம் 31ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜகத் சமந்த பெரேரா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சில பிரதேசங்களுக்கு இரவு 07 மணி வரை நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று (06) இரவு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி, பேலியகொடை, வத்தளை, மஹர, தொம்பே, ஜா-எல, சீதுவ மற்றும் கம்பஹா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

பசிலின் வழக்கை விசாரிக்க திகதி குறிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குணசிங்க, தீர்மானித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில், கிட்டத்தட்ட 30 கோடி ரூபாவை செலவழித்து, கூரைத்தகடுகளை விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கில், பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘கிளைபோசெட் பாவனையால் புற்றுநோயும் ஏற்படுகிறது’

கிளைபோசெட் பாவனையால் சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுமல்லாது, புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடுகள் ஏற்படுவது, பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக, கெலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சரத் குணதிலக தெரிவித்தார்.

இதேவேளை, தாய்ப்பால் மற்றும் சிறுநீரிலும் கிளைபோசெட் அடங்கியுள்ளமை, பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், கிளைபோசெட் தடைநீக்கம் காரணமாக இலங்கைத் தேயிலையின் நாமத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகின்றமைக்கும் கிளைபோசெட் பாவனையே காரணம் என்று குறிப்பிட்டு கூறிய அவர், கிளைபோசெட் பாவனையால் புற்றுநோய் ஏற்படுவது பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment